அண்டார்டிக் பனிமலைத் துண்டங்கள் தென்னாபிரிக்காவுக்கு

தென்னாபிரிக்காவுக்கு  இரண்டு வருடங்களாக ஏற்பட்ட கடும் வரட்சி நாட்டின் பல பாகங்களில் நிலத்தடி நீரை வறட்சியடையச் செய்துவிட்டது. முக்கியமாக நாட்டின் தெற்கு, மேற்குப் பிராந்தியங்கள் வறட்சிப் பிரதேசங்களாகக் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றன.

கேப் டவுன்இந்த நூற்றாண்டின் மிகவும் மோசமாக வறட்சியினால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் அங்கே நீரைப் பாவிப்பதில் மிகவும் கடுமையான சட்டங்கள் போடப்பட்டிருக்கின்றன. வரவிருக்கும் மழைக்காலத்தில் தேவையான அளவு மழை கிடைக்காவிட்டால் நகரின் 4 மில்லியன் மக்களுடைய தேவைக்குக் கொடுக்க நகரத்தில் நீர் இருக்காது என்பது ஏற்கனவே அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுவிட்டது.

ஏற்பட்டிருக்கும் வறட்சியை நேர்கொள்ள கேப் டவுன் நகரில் வசிக்கும் நிக் ஸ்லோன் இதுவரை எவரும் செய்திருக்காத ஒரு தீர்வை முன்வைக்கிறார். அவரது திட்டம் அண்டார்டிகாவிலிருந்து பனிமலைகளை வெட்டியெடுத்து இழுத்துக் கேப் டவுனுக்குக் கொண்டு வருவதாகும்.

ஆழ்கடலில் பயணம் செய்யும் கப்பல்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களில் உதவி செய்யும் நிறுவனத்தை நடாத்தும் ஸ்லோன் கடலில் தடம்புரண்ட கப்பல்கள் பலவற்றை நிமிர்த்தியவர். சில வருடங்களுக்கு முன்பு இத்தாலியத் தீவொன்றின் அருகே ஐநூறுக்கும் மேற்பட்டவர்களுடன் நீருள் மூழ்க ஆரம்பித்த கொஸ்டா கொன்கோர்டியா என்ற டைட்டானிக்கை விட இரண்டு மடங்கு பெரிய கப்பலில் உள்ளவர்களைக் காப்பாற்றவும் அதன்பின்பு சின்னாபின்னமடைந்த அக்கப்பலை இழுத்துச் சென்று கப்பல்களைப் பிரித்தெடுக்கும் இடத்தில் சேர்க்கவும் உதவியவராகும்.

பனிமலைத் துண்டங்களை வெட்டியெடுத்து அவைகள் வரும் வழியில் முழுவதுமாகக் கரையாமல் பாதுகாத்து இழுத்துவந்து கேப்டவுன் மக்களின் நீர்த்தேவையைப் பூர்த்திசெய்யத் தன்னால் உதவ முடியும் என்கிறார் நிக் ஸ்லோன். அதற்காக அவர் அரசாங்கத்திடனும் தனியாரிடமும் பொருளாதார உதவிகள் கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *