“சிம்ப்ஸன்ஸ்” தொடரும் நிறவாதக் குற்றச்சாட்டும்

அணுமின்சார நிலையத்தில் வேலை செய்யும் குடும்பத் தலைவர் ஹோமர், அவரது ஆசை மனைவி மார்ஜ், பிள்ளைகள் பார்ட், லிஸா, மகீ ஆகியோரைக் கொண்ட “சிம்ப்ஸன்ஸ்” தொலைக்காட்சித் தொடரைத் தெரியாதவர்கள் இருப்பது அரிது. இதுவரை 30 புதிய தொடர்கள் ஒளிபரப்பப்பட்டிருக்கின்றன. பதின்மூன்று பகுதிகளுடன் முதலாவது தொடர் ஆரம்பித்தபின் ஒவ்வொரு தொடரிலும் சுமார் 20க்கும் அதிகமான பகுதிகள் வெளிவந்தன.

நாளின் தொலைக்காட்சி நேர முக்கிய சமயத்தில் [prime time] ஒளிபரப்பப்படும் உலகின் பெரும்பாலான தொலைக்காட்சித் தொடர்களின் சாதனைகளைப் பல தடவைகள் “சிம்ப்ஸன்ஸ்” உடைத்துவிட்டது. சில அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடர்கள் 1960 களிலிருந்து இப்போதும் தொடர்ந்தாலும் அவைகள் அதிக பார்வையாளர்கள் தொலைக்காட்சியைப் பார்க்காத சமயத்தில்தான் இப்போதெல்லாம் காட்டப்படுகின்றன.

1989 இல் தொடங்கப்பட்ட “சிம்ப்ஸன்ஸ்” ஆரம்ப காலத்திலிருந்து 1990 கள் வரை ஒவ்வொரு தொடர் வெளியிடப்பட்டபோதும் 13 மில்லியன் பேரை ஈர்த்தது. அவ்வருடங்களில் மிகவும் அதிகமாக “சிம்ப்ஸன்ஸ்” பாகத்தைப் பார்க்க தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் அமர்ந்தவர்கள் தொகை 33 மில்லியன்கள் என்கிறது கணிப்பீடு.  

டசினுக்கும் அதிகமான வெவ்வேறு பரிசுகளைப் பெற்றிருக்கும் “சிம்ப்ஸன்ஸ்” தொடர் 31 தடவைகள் “எம்மி” பதக்கங்களைப் பெற்றிருக்கிறது.

ஆனால், சர்ச்சைகளைக் கிளப்பும் அந்தத் தொடர் நிறவாதம் உடையது என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளது.

அப்பு நஹாசபீமபெட்டிலோன் என்ற “சிம்ப்ஸன்ஸ்” பாத்திரம் ஒரு பல்பொருள் அங்காடி வைத்திருக்கும் இந்தியப் பின்னணியுள்ள அமெரிக்கர். அந்தப் பாத்திரத்துக்காகக் குரல்கொடுத்துவருபவர் வெள்ளை அமெரிக்கரான ஹன்ஸா அஸாரியா. அந்தப் பாத்திரத்திலிருக்கும் இந்தியர் ஒரு சாதாரண அமெரிக்கர்களின் குடியேறிய இந்தியர் பற்றிய தாழ்வான அபிப்பிராயங்களே என்று குற்றஞ்சாட்டி ஹரி கொண்டபோலு என்ற அமெரிக்காவில் வாழும் இந்திய நகைச்சுவை நடிகர் கடந்த வருட இறுதியில் குரல்கொடுத்தார். அதுபற்றி “தெ புரொப்ளம் வித் அப்பு” என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியும் வெளியானது.

“சிம்ப்ஸன்ஸ்” படைப்பாளரான மட்ஸ் கிரொனிங், ஹன்ஸா அஸாரியா ஆகியோர் அக்குற்றச்சாட்டுப் பற்றி எதுவும் பேச மறுத்துவிட்டனர்.

சில வாரங்களுக்கு முன்னர் வெளியான “சிம்ப்ஸன்ஸ்” பகுதியொன்றில் அவ்விமர்சனம் பற்றி மறைமுகமாகச் சாடப்பட்டது.

மார்ஜ் ஒரு புத்தகத்தைத் தன் மகள் லிஸாவுக்காக வாசிக்கிறார். அதற்கு முன்பு அப்புத்தகத்தில் யாரையாவது மனஸ்தாபத்துக்குள்ளாக்கக்கூடிய எல்லாவற்றையும் அப்புத்தகத்திலிருந்து விலக்கிவிடுகிறார். அது லிஸாவுக்குச் சுவாரஸ்யமில்லாமல் இருக்கிறது.

“சில பத்து வருடங்களின் முன்பு பெரும்பாலானோருக்குப் பிடித்திருந்த விடயம் இப்போது திடீரென்று தவறான அரசியல் கருத்தாகிவிட்டது,” என்று சொல்லும் லிஸா அப்புவின் படத்தைக் காட்டிக் கண்ணைச் சிமிட்டுகிறார். “அதற்கு என்ன செய்யலாம்?” என்று கேட்கிறார்.

“சில விடயங்களைச் சில காலம் கடந்தபின்புதான் ஆராயவேண்டும்,” என்கிறார் மார்ஜ்.

“ஆராயும் அவசியம் இருப்பின்,” என்று முடிக்கிறாள் லிஸா.

இப்போது ஹன்ஸா அஸாரியா வெளிப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் “சிம்ப்ஸன்ஸ்” பற்றிய சில விடயங்களைச் சிந்திக்கவைத்திருப்பதாகக் குறிப்பிட்டார். தான் தற்போதைக்கு அந்தத் தொடரிலிருந்து விலகிக்கொண்டு மக்களுக்குச் சிந்திக்க நேரம் கொடுப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.

“நான் எனது படைப்பில் பெருமைப்படுகிறேன். எங்கள் கலாச்சாரத்தில் இப்போது சிலர் தாங்கள் தாக்கப்படுவதாகச் சொல்லிக்கொள்வதில் ஆசைப்படும் காலம்,” என்கிறார் மட்ஸ் கிரொனிங்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *