இதுவரை கொவிட் 19 தொடாத டொங்காவுக்கு வானத்திலிருந்து அவசரகால உதவிகள் போடப்பட்டன.

டொங்கா தீவுகளுக்கு அருகே வெடித்த எரிமலையின் பக்க விளைவான சுனாமி, நச்சுச்சாம்பல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வியாழனன்று முதல் தடவையாக விமானம் மூலமாக உதவிகள் எட்டின. இயந்திரங்களின் உதவியின்றி டொங்கா இராணுவத்தினரால் சுத்தப்படுத்தப்பட்ட விமானத்தளத்தில் அவ்வுதவிகள் போடப்பட்டன. நியூசிலாந்து, ஆஸ்ரேலியா ஆகிய நாடுகள் முதல் கட்டமாக உதவிகளைக் கொடுத்திருக்கின்றன.

கொவிட் 19 தொற்று நோயால் இதுவரை எவருமே பாதிக்கப்படாத நாடு டொங்கா. எனவே, வெளிநாட்டவர்கள் உள்ளூராருடன் எவ்வித தொடர்புகளும் கொள்ளாமலிருக்கவேண்டுமென்ற டொங்கா அரசின் வேண்டுகோளை ஏற்றே விமானங்களிலிருந்து அவை கீழே போடப்பட்டன. குடிநீர், விமான நிலையத்தைச் சுத்தப்படுத்தும் இயந்திரம் உட்பட பல அவசர தேவைக்கான பொருட்கள் டொங்காவுக்குக் கிட்டின.

அதே நேரம் நாளை வெள்ளியன்று மேலும் அதிக உதவிப் பொருட்களைக் கொண்டு நியூசிலாந்து, ஆஸ்ரேலிய நாடுகளின் கடற்படைக் கப்பல்கள் டொங்காவை அடையவிருக்கின்றன. விமான நிலையத்தில் இறங்கக்கூடிய நிலை ஏற்பட்டதும் தாமும் அத்தீவு மக்களுக்கான அவசரகால உதவிகளைச் செய்வதாக சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளும் உறுதிகூறியிருக்கின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்