எஸ்.பி.பாலசுப்பிரமணியனுக்கு இந்தியாவின் இரண்டாவது அதியுயர்ந்த பட்டமான பத்ம விபூஷன் வழங்கப்பட்டது.

இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் செவ்வாயன்று ராஷ்ரபதி பவனில் வைத்து இந்தியக் குடிமக்களில் நாட்டின் வெவ்வேறு துறைகளில் சேவை செய்தவர்களுக்குப் பட்டங்கள் வழங்கினார். தமிழ் ரசிகர்களிடையே பெருமளவு வரவேற்பைப் பெற்ற எஸ்.பி.பி-க்கு நாட்டின் குடிமகனொருவர் பெறக்கூடிய இரண்டாவது அதியுயர்ந்த பட்டமான பத்ம விபூஷன் பட்டத்தை ஜனாதிபதி வழங்கினார்.

தனது 74 வயதில் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டுக் கடந்த வருடம் இறந்துபோன எஸ்.பி.பி-யின் சார்பில் அப்பட்டத்தை அவரது மகன் எஸ்.பி-சரண் பெற்றுக்கொண்டார். பத்மசிறீ பட்டத்தை 2001 லும், பத்ம பூஷன் பட்டத்தை 2011 லும் பெற்றுக்கொண்டவர் எஸ்..பி.பி.

தமிழர்களிடையே பிரபலம் பெற்றவர்களில் பட்டம் பெற்றுக்கொண்ட இன்னொரு பாடகி கே.எஸ்.சித்ரா ஆகும். அவர் அதே மேடையில் வைத்து பத்ம பூஷன் பரிசைப் பெற்றுக்கொண்டார்.

எஸ்.பி.பி-யுடன் சேர்ந்தும், ஏ.ஆர். ரஹ்மானின் இசையிலும் மறக்கமுடியாத பல பாடல்களைப் பாடியிருக்கிறார் கே.எஸ்.சித்ரா. தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், ஹிந்தி, பெங்காலி, உருது ஆகிய இந்திய மொழிகளில் பாடியிருக்கும் கே.எஸ்.சித்ரா, அன்னிய மொழிகளான மலாய், ஆங்கிலம், சிங்களம், லத்தின், அராபி, பிரெஞ்ச் ஆகிய மொழிகளிலும் பாடியிருக்கிறார். அவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 25,000 க்கும் அதிகமானவை என்று குறிப்பிடப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்