உலக ஆரோக்கிய அமைப்பு முதல் தடவையாகப் பெருந்தொற்று வியாதி இருட்டுக்கூடாக ஒளிக்கீற்றைக் காண்கிறது.

ஜெனிவாவில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் தலைவர் தெட்ரோஸ் கபிரியேசுஸ் கொவிட் 19 பெருந்தொற்றிலிருந்து விடுபட்டுவிட்டதாகக் கணிக்காதீர்கள் என்று மீண்டும் எச்சரிக்கும் அதே சமயம் அவ்வமைப்பின் தொற்று நோய்பாதுகாப்புக்கான அவசர நடவடிக்கைகளைத் தயார்செய்யும் உயர் நிர்வாகி மைக்கல் ராயன் முதல் தடவையாக, “கொவிட் 19 வியாதி, மக்கள் ஆரோக்கியத்துக்கு அபாயமானது என்ற நிலைமையிலிருந்து இவ்வருடம் நாம் விடுபட்டுவிடலாம் என்று நம்புகிறேன்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

“இதுவரை வந்த கொவிட் 19 திரிபுகளாலான அலைகளுடன் ஒப்பிடும்போது ஒமெக்ரோன் பலவீனமானதாக இருக்கலாம். அதன் பெரும் தாக்க அலை மெதுவாகக் குறைந்து வருவதைக் காண்கிறோம். ஆனால், அப்படியான முடிவை அவசரப்பட்டு எடுக்கலாகாது,” என்று குறிப்பிட்ட கபிரியேசுஸ் உலகின் பல நாடுகளின் மக்கள் ஆரோக்கிய சேவைகள் தொடர்ந்தும் கடுமையான பாரத்தை இழுப்பதையும், இறப்புக்கள் தொடர்ந்துகொண்டிருப்பதையும் சுட்டிக் காட்டினார். 

கடந்த வாரத்தில் மட்டும் ஐரோப்பாவில் ஐந்து மில்லியன் பேர் ஒமெக்ரோன் திரிபால் தொற்றப்பட்டார்கள். மார்ச் மாதத்துக்குள் ஐரோப்பியர்களில் பாதிப்பேருக்காவது அத்தொற்று உண்டாகுமென்று ஏற்கனவே உலக மக்கள் ஆரோக்கிய அமைப்புக் கணித்திருந்தது.  ஜேர்மனியில் செவ்வாயன்று மட்டும் ஒரு லட்சம் பேரும், பிரான்சில் அதன் பாதியளவும் அத்தொற்றுக்குள்ளானார்கள்.

“மக்களைப் பாதிக்க ஆரம்பித்த கிருமியொன்றை நாம் முழுசாக என்றுமே அழித்துவிட முடியாது. அக்கிருமி ஆங்காங்கே சிலரைத் தொடர்ந்தும் பாதித்துக்கொண்டே இருக்கும். இவ்வியாதியால் உலகில் ஏற்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிப்போமானால் கொவிட் 19 உலக மக்களை அழிக்கும் ஆபத்தான பெருநோய் என்ற கட்டத்தை நாம் இவ்வருடத்துக்குள் தாண்டிவிடலாம் என்று மைக்கல் ராயன்,” குறிப்பிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்