இரண்டாம் இடத்துக்கு வந்த அழகியின் இஸ்ரேலியப் பின்னணி மீது இனவாதம்!

பிரான்ஸின் இளம் அழகியைத் தெரிவு செய்வதற்காக நடைபெற்ற போட்டியில் இறுதிக்கட்டம் வரை முன்னேறி இரண்டாவது இடத்தை (first runner-up) வென்ற யுவதிக்கு எதிராக யூத எதிர்ப்பு இனவாதக் கருத்துக்கள் (anti-semitic) திட்டமிட்டுப் பரப்பப்பட்டுள்ளன.

போட்டியில் அவர் வெற்றியின் உச்சத்தை நெருங்கி இருந்த சமயத்தில் சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்ட யூத எதிர்ப்புப் பதிவுகளுக்கு பிரான்ஸின் அரசியல் பிரமுகர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.

புரோவென்ஸ்(Provence) பிராந்தியத்தின் அழகியான ஏப்ரில் பெனாயூம் (April Benayoum) போட்டியின் இறுதியில் மேடையில் தனது தந்தையாரின் இஸ்ரேல் பூர்வீகம் குறித்து நினைவுகூர்ந்த சிறிது நேரத்தில் அவருக்கு எதிரான கருத்துக்கள் ருவீற்றர் உட்பட சமூகவலைத்தளங்களில் பரவின.ஒரு போட்டியின் வெற்றியாளரை இலக்குவைத்து யூத மற்றும் சியோனிச வெறுப்புவாதக் கருத்துக்கள் பகிரப்பட்டிருப்பதை நாடாளுமன்ற பிரதிநிதிகள் உட்பட பலர் கண்டித்து கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.

“மிஸ் புரோவென்ஸ் மீதான யூத எதிர்ப்பு அவமரியாதைகள் குறித்து தான் அதிர்ச்சி அடைந்துள்ளேன் ” என்று உள்துறை அமைச்சர் தனது ருவீற்றர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். முன்னாள் பிரதமர் மனுவல் வால்ஸும் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார். கடும் போட்டிக்கு மத்தியில் இரண்டாம் இடத்தை வென்றதைப் பெருமையாகக் குறிப்பிட்டிருக்கும் அழகி ஏப்ரில் பெனாயூம், இனவாதக் கருத்துக்களால் தான் பாதிக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.

பிரான்ஸின் ஒரு பிராந்தியமான புரோவென்ஸ் பகுதியைச் சேர்ந்த அவரது தந்தையார் ஓர் இஸ்ரேலியர் ஆவார்சனியன்று இரவு நடைபெற்ற போட்டியில் அழகியாகத் தெரிவாகிய நோர்மென்டி யுவதி அமொண்டின் பெட்டிற் (Amandine Petit), ஏப்ரில் பெனாயூமுக்குத் தனது முழு ஆதரவை தெரிவித்திருக்கிறார்.

(படம் :அழகி ஏப்ரில் பெனாயூம், நன்றி France bleu)

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *