கேகால, சிறீலங்காவில் கொவிட் 19 ஐச் சுகப்படுத்தும் பாகு இலவசமாக வழங்கப்பட்டதா?

தம்மிக பண்டார என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கொவிட் 19 ஐச் சுகப்படுத்தும் மருந்துப் பாகு ஒன்று கேகாலையிலிருக்கும் கெத்திமுல்ல என்ற இடத்தில் இலவசமாகக் கொடுக்கப்படப்போவதாக செவிவழிப் பறையடிப்பு மூலம் அறிந்து பெரும் கூட்டம் நெரித்தடித்துக்கொண்டு 09.12 அன்று காலை காத்திருந்ததாகத் தெரியவருகிறது. 

சிறீலங்காவின் தொலைக்காட்சிச் செய்தி ஒன்றில் தம்மிக பண்டார என்ற நாட்டு வைத்தியர் தான் குறிப்பிட்ட மருந்துப் பாகுவை மிகக் குறுகிய காலத்தில் கண்டுபிடித்ததாகவும் அதை ஒரு வதுபிதிவல அரச மருத்துவ மனையில் நோயாளிகள் சிலரிடம் பரீட்சித்து வெற்றிகரமான விளைவுகளைக் கண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

பண்டாரவின் கூற்றை சிறீலங்காவின் நாட்டு வைத்திய அமைச்சர் சிசிர ஜெயக்கொடியும் ஆதரித்துக் குறிப்பிட்ட பாகு ஒரு மனிதனை ஆயுள் காலம் முழுவதும் கொவிட் 19 தொற்று உண்டாகாமல் காக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்த்தன இதுபற்றிப் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டு வைத்தியர் பண்டார குறிப்பிட்ட மருத்துவக் குழுவிலிருந்து நீக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆனாலும், செவிவழியாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமும் இந்த மருந்து கேகாலையின் மருத்துவ நிலையத்தில் இலவசமாக விநியோகிக்கப்படும் என்று கேள்விப்பட்ட பல நூற்றுக்கணக்கானோர் அங்கே காத்திருந்தார்கள். அங்கு புத்த மத பிரார்த்தனைகள் நடந்தேறியபின் சிறிய போத்தல்களில் அந்த மருந்து விநியோகிப்பட்டதாகத் தெரியவருகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *