துருக்கியையும் ஈரானையும் வாய்த்தர்க்கத்தில் மோதவைத்தது ஒரு கவிதை.

டிசம்பர் 10 திகதியன்று ஆஸார்பைஜானுக்கு விஜயம் செய்த துருக்கிய ஜனாதிபதி உத்தியோகபூர்வமான பேச்சொன்றில் அங்கு வாழும் ஆஸாரிய மக்களின் கவிதையொன்றை வாசித்தார். அக்கவிதையின் உள்ளடக்கம் ஈரானிய அரசுக்குப் பிடிக்கவில்லை. ஈரானின் வெளிநாட்டமைச்சர் “எங்கள் அன்புக்குரிய ஆஸார்பைஜானைப் பற்றிப் பேச எவருக்கும் அருகதையில்லை ……” என்று டுவீட்டினார்.

“அவர்கள் அராஸ் நதியைப் பிரித்து மணலில் நிரப்பினார்கள். என்னை உங்களிடமிருந்து பிரிக்க முடியாது. அவர்கள் எங்களை வலுக்கட்டாயமாகப் பிரித்துள்ளனர்,” என்ற வரிகளின் மூலம் எர்டகான் ஈரானில் வாழும் துருக்கர்களையும் ஆஸார்பைஜானில் வாழும் துருக்கர்களையும் ஒரு பரந்த துருக்கிய ராச்சியத்தினுள் அடங்குவதாகக் குறிப்பிட்டார். குறிப்பிட்ட அராஸ் நதியின் பாகங்கள் இப்போது ஆஸார்பைஜான், ஆர்மீனியா மற்றும் துருக்கியின் பாகங்களாக இருக்கின்றன.

ஒரு காலத்தில் பரந்த ஒத்தமான் சாம்ராஜ்யத்தின் காலத்தில் அவையெல்லாம் ஒரு ஒப்பந்தம் மூலம் துருக்கர்களிடமிருந்தது. அப்பாகங்களில் இப்போதும் வாழும் ஆஸாரர்கள் துருக்கியிடம் விசுவாசமாக இருக்கிறார்கள். அந்தக் கனவு மீண்டும் நிறைவேறாது என்று சுட்டிக்காட்டினார் ஈரானின் வெளியுறவு அமைச்சர். முஹம்மது ஜாவேத் ஷரிப்.  

“எங்கள் அன்புக்குரிய ஆஸார்பைஜானைப் பற்றிப் பேச எவருக்கும் அருகதையில்லை. குறிப்பிட்ட கவிதை வரிகளை அங்கே குறிப்பிடுவதன் மூலம் ஆஸார்பைஜானின் எல்லைகளை எர்டகான் கேள்விக்குறியாக்குகிறார்,” என்று குறிப்பிட்ட ஈரானிய வெளிநாட்டமைச்சர் தனது நாட்டிலிருக்கும் துருக்கியத் துதரை அழைத்து ஈரானின் ஆட்சேபனையைத் தெரிவித்தார்.

அதனால் கொதித்தெழுந்த துருக்கி தனது நாட்டிலிருக்கும் ஈரானியத் தூதரை வரவழைத்து அவரிடம் தமது ஆட்சேபனையைத் தெரிவிக்க இரண்டு நாடுகளிடையேயும் சில நாட்களாகத் தர்க்கங்கள் வலுவாகின.

ஞாயிறன்று துருக்கிய ஜனாதிபதி எர்டகான், ஈரானின் வெளி நாட்டு அமைச்சரைத் தொலைபேசியில் அழைத்துப் பேசித் தங்களிடையே உண்டாகியிருந்த சச்சரவைத் தீர்த்துக்கொண்டதாக அறிவித்தார்கள்.

சாள்ஸ் ஜெ.போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *