தொந்தரவு செய்யும் விளம்பரத் தொலைபேசி அழைப்புக்களும் கொரோனாக் காலமும்.

எங்கள் நேரத்தை வீணாக்கும், பொறுமையைச் சோதிக்கும் விளம்பர நிறுவனங்களின் தொலைபேசி அழைப்புக்களால் தொல்லைப்படுத்தப்படாதவர்களில்லை. Truecaller என்ற கணிப்பு நிறுவனம் அவைகளைப் பற்றி வருடாவருடம் அலசி ஆராய்கிறது. தொல்லைகள் கொடுப்பது மட்டுமன்றி ஏமாற்றுதலிலும் தாராளமாக ஈடுபட்டுவரும் அப்படிப்பட்ட அழைப்புக்களால் வருடாவருடம் பத்து மில்லியன் டொலர்களையும் விட அதிகமான ஏமாற்றுதல்கள் நடப்பதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிடுகிறது.

கொரோனாக் கட்டுப்பாடுகளா உலகின் பல நாடுகளில் சமூக அடைப்புக்கள் நடந்தும், எங்கள் நடவடிக்கைகள் மாறியும் கூட எங்கள் தொலைத்தொடர்புகள் குறையவில்லை. அதே போலவே விளம்பர நிறுவனங்களின் தொல்லை அழைப்புகளிலும் குறைதல் காணப்படவில்லை, மாறாக அதிகமாகியிருக்கிறது. மட்டுமல்லாமல் நாட்டு எல்லைகளைக் கடந்து தொல்லைகளையும் ஏமாற்று வேலைகளையும் செய்கிறது.

தொல்லை தரும் தொலைபேசி அழைப்புக்களை நிறுத்துவதிலும் ஈடுபடும் Truecaller 2020 இல் தாம் 31. 3 பில்லியன் தொலைபேசி அழைப்புக்களை அடையாளம் கண்டு நிறுத்த உதவியதாகவும் கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது அது 18 விகிதம் அதிகமென்றும் குறிப்பிடுகிறது. அத்துடன் 145.4 பில்லியன் அடையாளம் காணமுடியாத தொலைபேசி அழைப்புக்களைக் காணமுடித்ததாகவும் அது கடந்த வருடத்தை விட 25 விகிதத்தால் அதிகரித்திருப்பதாகவும் குறிப்பிடுகிறது.

தொல்லைப்படுத்தும் அழைப்புக்களைப் பெறுவதில் முதலிடத்திலிருந்த நாடான இந்தியாவில் அது குறைந்து அது ஒன்பதாவது இடத்தைப் பிடிக்க முதலிடத்தை பிரேசில் பிடித்திருக்கிறது. அங்கே அப்படியான தொலைபேசி அழைப்புக்கள் 9 விகிதத்தால் அதிகரித்திருக்கின்றன.

அமெரிக்கா தொல்லைப்படுத்தும் தொலைபேசி அழைப்புக்களைப் பெறும் நாடுகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. கடந்த வருடத்தைவிட அத்தொல்லை 56 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது.

தொல்லை அழைப்புகள் மோசமில்லாத நாடுகளாக இருந்த ஹங்கேரி, போலந்து, ருமேனியா, ஸ்பெயின், ஐக்கிய ராச்சியம், உக்ரேன், ஜேர்மனி, கிரீஸ், பெல்ஜியம் ஆகியவைகளில் அது அதிகரித்திருக்கிற்து. 

அடையாளம் தெரியாத இடங்களிலிருந்தும், இயந்திரங்களால் அழைக்கப்படும் தொல்லை செய்யும் அழைப்புக்கள் சுமார் 50 விகிதத்தால் அதிகரித்திருக்கின்றன. கொரோனாக் கால முதல் மாதத்தில் இலேசாகக் குறைந்து சென்ற அழைப்புக்கள் வேகமாக அதிகரித்து அழைப்பவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து தமது தொல்லைகளை அதிகரித்திருக்கிறார்கள் என்கிறது Truecaler நிறுவனம்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *