அஸ்ரா செனகா தடுப்பூசிகளைக் கைவிடும் நாடுகளின் மருந்துகளை வாங்க வரிசையில் நிற்கின்றன வேறு நாடுகள்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தொடர்ந்தும் “அஸ்ரா செனகா தடுப்பூசி பாவனைக்கு உகந்தது. மிக அரிதாக அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பைவிட அதன் உபயோகம் பெரியது,” என்று குறிப்பிட்டும் கூட அதைப் பாவிப்பதை டென்மார்க் கைவிட்டது. அதைக் கைவிடும்படி நோர்வேயின் மக்கள் ஆரோக்கிய அமைப்பும் அரசுக்குச் சிபார்சு செய்திருக்கிறது.
டென்மார்க்கிடம் பாவிக்காத 200,000 அஸ்ரா செனகா மருந்துகள் இருக்கின்றன. அவைகளை வாங்கிக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நாடுகள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன. அந்தத் தடுப்பூசிகளை உலகின் வறிய நாடுகளுக்குக் கொடுத்துவிட விரும்புவதாக டென்மார்க் உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் நிர்வாகிகளிடம் தெரிவித்திருக்கிறது.
லத்வியா, செக் குடியரசு ஆகிய நாடுகள் டென்மார்க்கின் வேண்டாத தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் முயற்சி செய்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் வாங்கிக்கொள்ளும் தடுப்பு மருந்துகள் நாட்டின் குடிமக்கள் அளவுக்கேற்றபடி எண்ணிக்கையில் வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. அவைகள் தேவையில்லாது போனால் அவற்றை எப்படி ஒன்றியத்தின் வேறு நாடுகளுக்குக் கொடுப்பது என்று தீர்மானம் எடுக்கப்படவில்லை.
பொதுவாகவே ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் தமது தேவைக்கு மிக அதிகமான அளவிலேயே தடுப்பு மருந்துகளை வாங்கும் ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றன. அதன் நோக்கம் வறிய நாடுகளுக்கு ராஜதந்திர உறவுக்காக அவைகளைக் கொடுப்பதாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்