நெப்போலியன் 1812 இல் ரஷ்யாவுடன் போரிட்டுத் தோல்வியுற்றுப் பின்வாங்கிய சமயத்தில் இறந்த இராணுவத்தினரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

பெரும் இராணுவ வெற்றிகளை அடைந்த நெப்போலியனுடைய இராணுவமும் ரஷ்யாவைக் கைப்பற்ற முற்பட்டுத் தோல்வியடைந்தது. வியாசாமா போர்க்களம் என்ற அந்தப் போரில் ரஷ்யா பின்வாங்க ஆரம்பித்தபோது இறந்த 120 போர்வீரர்களும் 200 வருடங்களுக்குப் பின்னர் அடக்கம் செய்யப்பட்டனர்.

1812 ம் ஆண்டு நவம்பர் 3ம் திகதியன்று ஆரம்பித்த அந்தப் போரில் ரஷ்யாவின் தளபதி நெப்போலியனின் இராணுவத்தின் மீது மொஸ்கோவுக்கு வெளியே வைத்து அதிரடித் தாக்குதலை நடத்தினார். பிரான்ஸிலிருந்து 100,000 வீரர்களுடன் ரஷ்யாவை நோக்கி நகர்ந்த நெப்போலியனின் படையில் அப்போது சுமார் 60,000 பேரே மிச்சமிருந்தனர். வழியெங்கும் இருந்த கடுமையான இராணுவ மற்றும் இயற்கை எதிர்ப்புக்களைத் தாங்கிச் சோர்ந்து, களைத்துப்போயிருந்தது நெப்போலியனின் இராணுவம். அந்தப் போரின் வீழ்ச்சியே நெப்போலியனின் வீழ்ச்சியின் ஆரம்பக்கட்டம் என்று என்கிறார்கள் சரித்திரவியலாளர்கள்.

பின்வாங்கிய பிரென்ச் வீரர்களைக் கடுமையாகத் தாக்கி வெற்றிபெற்றது ரஷ்யா. அச்சமயத்தில் இறந்த 120 வீரர்கள், மூன்று பெண்கள், மூன்று இளவயதினரின் உடல்கள் கிடங்கொன்றினுள் ஒன்றாகப் போட்டு மூடப்பட்டிருந்ததை 2019 இல் பிரென்ச் – ரஷ்ய அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். முதல் கட்டத்தில் அதுவும் இரண்டாம் உலகப் போரில் இறந்தவர்களுடைய சடலங்களே என்று கருதப்பட்டது. ஆனால், உடைகள், இறந்தவர்களின் வயதுகளை ஆராய்ச்சிகளின் மூலம் கணித்த ரஷ்ய ஆராய்ச்சியாளர்களே அவை நெப்போலியனின் இராணுவத்தினருடையது என்பதைத் தெளிவுசெய்தார்கள். இறந்தவர்களின் வயது 30 களைச் சுற்றியே இருந்தன.

அவ்வுடல்களை இறுதி மரியாதைகளுடன் மீண்டும் வியாசாமாவிலிருக்கும் சவக்காலையொன்றில் அடக்கம் செய்யும் விழா இரண்டு நாட்டு அரசுகளாலும் சேர்ந்து 08ம் திகதி நடத்தப்பட்டது.

பிரான்ஸிலிருந்தும், ரஷ்யாவிலிருந்தும் இராணுவ, அரசியல் முக்கியஸ்தவர்களுடன், அப்போரில் பங்குபற்றியவர்களின், இறந்தவர்களின் சந்ததியைச் சேர்ந்தவர்களும் அவ்விழாவில் ஒற்றுமையுடன் பங்குபற்றினர். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *