15 மில்லியன் உணவுப் பொதிகளைக் குப்பையில் கொட்டப்போகும் பிரிட்டிஷ் பாடசாலைகள்!

நாடு முழுவதும் கொரோனாத் தொற்றுக்கள் மோசமாகப் பரவிக்கொண்டிருந்த நிலையிலும் பிரிட்டிஷ் அரசு பாடசாலைகள் புதுவருட விடுமுறைக்குப் பின்னர் வழக்கம்போலவே ஆரம்பிக்கப்படுமென்று திடமாக அறிவித்து வந்தது. அதன் விளைவாகப் பாடசாலைகள் தமது மாணவர்களுக்கான முதல் வார உணவை ஏற்கனவே வாங்கத் திட்டமிட்டு ஒழுங்குசெய்யவேண்டியதாயிற்று. 

கடைசி நிமிட திடீர் மாற்றமாக பிரிட்டிஷ் அரசு பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்தபோது பாடசாலைகளுக்கு அந்த உணவுப்பொட்டலங்கள் பற்றிய முடிவுகளை மாற்றக்கூடிய காலம் கடந்துவிட்டிருந்தது. பாடசாலைகள் வழக்கமாக ஒரு வார உணவை ஏற்கனவே தருவித்துத் தமது உணவு சாலைகளில் பாதுகாப்பது வழக்கம். அதற்கு அளவான இடங்களே பாடசாலைகளின் குளிர்சாதனப் பெட்டிகள், உறைபெட்டிகளில் இருக்கின்றன. அவைகளைத் தொடர்ந்தும் அங்கே பேணுவதில் செலவே அதிகம் என்பதால் நல்ல நிலையிலிருக்கும் 15 மில்லியன் உணவுகளும் குப்பைக்கே அனுப்பப்படும் என்று பாடசாலைகளின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

பிரிட்டிஷ் பாடசாலைகள் மூன்று மில்லியன் உணவுப்பொதிகளைத் தினசரி விநியோகிக்கிறது. ஒரு உணவுப் பொட்டலத்தின் செலவு 2 பவுண்டுகளாகும். பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கும் சமயத்திலும் பதிந்திருக்கும் மாணவர்களுக்கு உணவு இலவசம் என்றும் பிரதமரால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் அவைகள் பற்றிய விபரங்கள் தெரியாது.

பிரிட்டனின் நிறுவனக் குப்பைகளை எடுத்துச் செல்வதை நிர்வகிக்கும் நிறுவனமான BusinessWaste.co.uk தாம் “எந்தவிதக் குறைபாடுமில்லாத உணவு மலையை” எடுத்துச் சென்று குப்பையாக்கும் செயலுக்குத் தயாராகியிருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *