சீனாவில் விவாகரத்துக் கோரியவனை, மனைவியாயிருந்த காலத்தில் அவள் செய்த வீட்டு வேலைகளுக்குச் நஷ்ட ஈடு கொடுக்கவைத்த நீதிமன்றம்.

சீன நீதிமன்றமொன்றில் விவாகரத்துக்குக் கோரிச் சென்றார்கள் 2015 இல் கல்யாணம் செய்துகொண்ட தம்பதிகள். பெண்ணோ தானே வீட்டு வேலைகளைச் செய்ததாகவும் பிள்ளையையும் பார்த்துக்கொண்டதாகவும், அவைக்காகத் தனக்கு நஷ்ட ஈடு தரவேண்டுமென்றும் கோரினாள்.

ஐந்து வருடங்கள் வீட்டுப் பொறுப்புக்களைச் சுமந்த மனைவிக்கு 50,000 யுவான்கள் நஷ்ட ஈடு கொடுக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன் மாதாமாதம் 2,000 யுவான் கொடுக்கவேண்டுமென்றும் குறிப்பிட்டிருக்கிறது. இப்படியான ஒரு தீர்ப்பை நீதிமன்றம் கொடுப்பது இதுவே முதல் தடவையாகும் என்பதால் இத்தீர்ப்பு சீனாவில் ஒரு முக்கிய பேசுபொருளாகியிருக்கிறது.

இவ்வருட ஆரம்பத்தில் சீனாவில் ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி ஒரு குடும்பத்தில் ஒருவர் வீட்டு வேலைகளில் அதிக பொறுப்பெடுத்திருப்பின் [வயதானவர்களைப் பேணுதல், பிள்ளைகளைக் கவனித்தல் போன்றவை] விவாகரத்துக் கோரும் சந்தர்ப்பத்தில் அந்த நபர் எடுத்த பொறுப்புக்கான பொருளாதார நஷ்ட ஈட்டை மற்றவர் கொடுக்கவேண்டும். சட்டம் கொண்டுவரப்பட்டதன் காரணம் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரின் வேலையும், பாதுகாப்பையும் உறுதி செய்யவேண்டும் என்பதாகும். 

இச்சட்டம் கொண்டுவரமுன்னரும் இதே போன்ற நஷ்ட ஈட்டைக் கோரும் வாய்ப்பு இருந்தது. ஆனால், அது ஒரு ஒப்பந்தமாகத் திருமணத்தின் முன்னரே தம்பதிகள் செய்துகொண்டிருக்க வேண்டும். பொதுவாகச் சீனக் குழும்பங்களில் பெண்கள் கணவனை விட 2.5 அதிக “சம்பளமில்லாத வேலை” செய்பவர்களாக இருக்கிறார்கள். சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *