வாழ்நாள் சாதனைக்குரிய மக்கள் மனங்களை வென்ற பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் பூதவுடல் 78 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் மண்ணில் சங்கமமானது.திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் அமைந்துள்ள அவரின் பண்ணை வீட்டில் உடல் சமயக்கிரியைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதிச்சடங்கினை அவரின் மகன் பாடகர் எஸ்பிபி சரண் கண்ணீருடன் செய்து வைத்தார்.
திரையுலகின் பல கலைஞர்களும் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டு தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர்.
அத்துடன் இந்திய பிரதமர்,ஜனாதிபதி,தமிழக முதலைமைச்சர்,எதிர்க்கட்சித் தலைவர்கள், மற்றும் பல அரசியல்வாதிகளும் ஆகியோரும் தங்கள் அஞ்சலிகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழில் “ஆயிரம் நிலவேவா” என்ற பாடலுடன் தமிழ் சினிமாவுக்கு பிரவேசித்து, தமிழ்,தெலுங்கு கன்னடம் ஹிந்தி என இந்தியாவின் பல மொழிகளிலும் 40000 பாடல்களுக்கு மேல் பாடி சாதனை படைத்த ஒரு புகழ் பெற்ற இந்திய கலைஞனாக இவ்வுலகை நீத்திருக்கிறார் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள்.
ஒரே நாளில் 12 மணித்தியாலங்களில் தெலுங்கில் 21 பாடல்களை இசையமைப்பாளர் உபேந்திரகுமார் இசையில் பாடிய பெருமைக்குரியவர். அதே போல் தமிழில் 19 பாடல்களையும் ஹிந்தியில் 16 பாடல்களையும் பாடி மக்கள் மனங்களை வென்ற அற்புதமான கலைஞன் ஆவார். இன்னும் என்றும் மக்களை இசையால் ஆளப்போகும் எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் உலக ரசிகர்கள் கண்ணீரோடு இன்று விடைகொடுக்க பூதவுடல் மண்ணுடன் சங்கமமானது.
