உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு துணியிலான முகக்கவசமே போதுமென்கிறது. சுவீடன் நகரொன்று முகக்கவசத்தைத் தடை செய்திருக்கிறது.

கொரோனாக் காலத்தில் பரவலைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற காரணத்துடன் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம், பாதுகாப்பானது,உதவக்கூடும் போன்ற பல கருத்துக்களுடன் பல நாடுகளும் வெவ்வேறான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. முகக்கவசம் அணிந்து பொது இடங்களில் நடமாடுதல் “கொரானாப்பாதுகாப்பு,” என்பதற்கு மறுபெயராகிவிட்டது.

முகக்கவசத்தால் மட்டுமே தொற்றிலிருந்து எவரும் தம்மையோ மற்றவரையோ முழுவதும் காப்பாற்ற முடியாது என்று மருத்துவ ஆராய்வுகள் குறிப்பிட்டு வந்தாலும், நீண்டகாலமாகவே துணியிலான சாதாரண முகக்கவசம் போதுமென்ற நிலைமை இருந்தது. ஆனால், சமீப வாரங்களில் FFP2 முகக்கவசம் தான் பாவிக்கவேண்டுமென்று ஜேர்மனியில் ஒரு மாநிலம் அறிவித்திருக்கிறது. ஆஸ்திரியா, பிரான்ஸ் போன்ற நாடுகளும் அதையே தொடரலாம் என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன. 

அதே சமயத்தில் மீண்டும் உலக மக்கள்  ஆரோக்கிய அமைப்பு முகக்கவசம் பற்றித் தனது பரிந்துரையை அறிவித்திருக்கிறது. “சாதாரண துணியிலான முகக்கவசமே போதுமானது”, என்கிறது அவர்களுடைய பரிந்துரை.  

இதே சமயத்தில் இதுவரை ‘முக்கவசம் அணிவது ஒரு பொய்யான பாதுகாப்புப் பிரமையையே ஒருவருக்கு அளிக்கிறது. தனிமைப்படுத்தல், விலகியிருத்தல், சுகாதாரம் பேணுதல், கூட்டங்களைத் தவிர்த்தல் போன்றவைகளுடன் முகக்கவசம் அணிதல் ஓரளவு பாதுகாப்பைத் தரக்கூடும்’ என்று குறிப்பிட்டு வருகிறது சுவீடனின் தொற்று நோய்ப் பரவல் கட்டுப்படுத்தும் அதிகாரம். மார்கழி மாதக் கடைசியில் முதல் முறையாக நெரிசலான போக்குவரத்தில் மட்டும் சுவீடனில் முகக்கவசம் அணிதல் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

அத்துடன் சுவீடனில் ஹாம்ஸ்டாட் என்ற நகரசபையில் பாடசாலைகளில் முகக்கவசம் அணிதலைத் தடைசெய்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. ‘தொற்றுநோய்ப் பரவலைத் தடுக்கும் அதிகாரிகள் செய்திருக்கும் பரிந்துரையில் முகக்கவசமணிதல் கொரோனாத்தொற்றைத் தடுக்காது என்றே குறிப்பிடுவதால் நாம் அதைத் தடை செய்கிறோம்,” என்கிறது நகரசபை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *