மனிதர்களெவரும் வாழாத தீவொன்றில் 33 நாட்கள் அகப்பட்டுத் தற்செயலாகக் காப்பாற்றப்பட்டார்கள் கியூபாவைச் சேர்ந்த மூவர்.

மயாமி தீவிலிருந்து கடலோரமாகவும், கடற்பகுதியிலும் பறந்து கண்காணிக்கும் விமானமொன்று பஹாமாஸுக்கு அருகே நடுக்கடலில் எவரும் போகாத தீவொன்றில் மூவரைக் கவனித்தார்கள். அவர்களுக்கு உணவு மற்றும் நீரை விமானத்திலிருந்து கீழே போட்டார்கள். பின்னர் ஹெலிகொப்டர் ஒன்று அவர்களை மீட்பதற்காக அனுப்பப்பட்டது.

இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணுமாகக் கியூபாவிலிருந்து படகொன்றில் புறப்பட்டபோது படகு உடைந்து அவர்கள் குறிப்பிட்ட தீவுக்கு அருகேயிருந்து நீந்தி அந்தத் தீவை அடைந்திருந்தார்கள். மனித நடமாற்றமற்ற அத்தீவிலிருந்து தேங்காய், கடலிருக்கும் ஒரு வகையான சிப்பிக்குள்ளிருந்து எடுக்கும் மாமிசம் (conchs) ஆகியவற்றை உண்டு 33 நாட்கள் அம்மூவரும் உயிர்வாழ்ந்ததாகத் தெரிகிறது.

“குடி நீரில்லாத அத்தீவில் அவர்கள் அத்தனை நாட்கள் அவர்கள் எப்படிச் சமாளித்தார்களோ,” என்று வியப்புடன் அந்த மூவரும் மிகவும் மெலிந்து, பலவீனமாக இருந்ததாக மீட்புப் படையதிகாரி குறிப்பிடுகிறார். அவர்கள் புளோரிடாவிலிருக்கும் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுப் பரிசோதனைகள் செய்ததில் எல்லோருமே நல்ல ஆரோக்கியத்துடனிருந்தார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் கியூபாவிலிருந்து படகு மூலம் அமெரிக்காவுக்குத் தப்பிய அகதிகளா அல்லது சாதாரணமாகப் படகில் பயணம் செய்து அங்கே மாட்டிக்கொண்டார்களா என்று தெரிவிக்கப்படவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *