ஹங்கேரிக்கு ஐரோப்பிய ஒன்றியம் இரண்டு மாதக் கெடு கொடுத்திருக்கிறது.

ஹங்கேரியினுள் செயற்படும் அரசு அல்லாத தனியார் அமைப்புக்கள் தமக்கு வெளி நாடுகளிலிருந்து யார் நிதி கொடுக்கிறார்கள் என்ற விபரங்களை அரசுக்கு வெளியிடவேண்டும் என்று ஹங்கேரி 2017 இல் சட்டமியற்றியிருக்கிறது. அப்படியான சட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணானது என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

“நாடுகளில் இயங்கும் அரசாங்கம் சம்பந்தமில்லாத அமைப்புக்களும் ஒரு நாட்டின் ஜனநாயகத்துக்கும் மனிதாபிமான சேவைகளுக்கும் அவசியமானவை. அப்படியான அமைப்புக்களை எதிர்க்கலாகாது, உற்சாகப்படுத்தவேண்டும்,” என்று குறிப்பிடும் ஐரோப்பிய ஒன்றியம் ஹங்கேரி தனது சட்டத்தை மாற்றிக்கொள்ளாவிடும் பெருமளவில் தண்டங்கள் செலுத்தவேண்டிவருமென்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஒர்பான் அந்தச் சட்டம்  தீவிரவாதத்தை ஒடுக்கவும், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குவதையும் தடுப்பதற்காகவே என்று குறிப்பிட்டார். ஆனால், உண்மையான காரணம் ஒர்பான் ஹங்கேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட சர்வதேச முதலீட்டாளர், மனிதாபிமான நிறுவனர் ஜோர்ஜ் ஸோரோசுடைய லிபரல் கோட்பாடுகள் ஹங்கேரியில் வேரூன்றிவிடக்கூடாதென்று எடுக்கும் நடவடிக்கைகளே என்று விமர்சிக்கப்படுகிறது.

ஹங்கேரியில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த ஸோரோஸின் பல்கலைக்கழக நிறுவனங்களை (Central European University) 2019 இல் ஒர்பானின் அரசு புதிய சட்டங்களின் மூலம் நாட்டை விட்டு விரட்டியது. அதற்காக நாட்டில் புதிய ஒரு கல்விச் சட்டத்தை அரசு கொண்டுவந்திருந்தது.

வேறினத்தினரை ஹங்கேரிக்குள் குடியேற்றவிடலாகாது, பாரம்பரியக் கோட்பாடுகளின்படி வாழவேண்டும் என்ற ஒர்பானின் அரசியலைத் தொடரவே ஹங்கேரிய அரசு தமக்குச் சவாலாக இருப்பவர்களை ஒழித்துக்கட்டி வருகிறது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்து இருக்கிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *