ஐரோப்பாவுக்குள் தஞ்சம் கோரி வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அரசியல் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களைக் கையாளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைப்பான EASO 2020 இல் ஐரோப்பாவினுள் அரசியல் தஞ்சம் கோரியிருப்போரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கிறது. 2019 இல் சுமார் 670,000 ஆக இருந்த தஞ்சம் கோரி வருவோரின் எண்ணிக்கை 2020 இல் சுமார் 460,000 ஆகக் குறைந்திருக்கிறது.

ஐரோப்பாவினுள் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை குறைவதற்கான காரணம் சர்வதேச அளவில் போர்கள், அரசியல் பிரச்சினைகள் குறைந்திருப்பதல்ல. கொரோனாத் தொற்றுக்கள் காரணமாக உலகெங்கும் போக்குவரத்து வசதிகள் கடுமையாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதைத் தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் (Pushbacks) “வெளித் தள்ளுதல்” நடப்புகளுமே என்று மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பிடுகின்றன.

கிரீஸ், இத்தாலி போன்ற நாடுகள் தமது எல்லைக்குள் வருபவர்களை வழிமறித்துத் துரத்திவிடுகின்றன என்ற குற்றச்சாட்டுச் சமீபத்தில் அதிகமாகியிருக்கிறது. ஹங்கேரி, கிரவேஷியா போன்ற நாடுகள் தமது எல்லைகளில் கடுமையான காவல் நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றன. ஐ.நா-வின் அகதிகள் பாதுகாப்பு அமைப்பும் அதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதை மறுக்கின்றன.

அது மட்டுமன்றி Frontex என்ற ஐரோப்பிய ஒன்றியத்துக்குச் சொந்தமான எல்லைக்காவல் படை ஐரோப்பாவின் கடலெல்லைகளில் தனது காவல்களை அதிகப்படுத்தியிருக்கிறது. அவர்களுடைய காவல்படை பல தடவைகள் கடலுக்குள் வரும் அகதிகள் கப்பல்களைத் துரத்திவிட்டிருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் வந்திருக்கின்றன. அந்த அமைப்பின் தலைவர் மீதும் அதுபற்றிக் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *