மெற்றோ உட்படப் பயணங்களில் பேசுவதை தவிர்க்க அறிவுறுத்தல் இடைவெளி இனி இரண்டு மீற்றர்.

வேகமாகப் பரவிவரும் புதிய வைரஸுகளிடம் இருந்து தப்புவதற்கான வழிமுறைகளில் ஒன்றாகப் பொதுப் போக்குவரத்துகளில் வாயைத் திறக்காமல் – மொபைல் போன்களில் பேசுவதைத் தவிர்த்து – அமைதி காக்குமாறு பயணிகள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

பிரான்ஸின் மருத்துவ அக்கடமி (l’Académie de médecine) விடுத்துள்ள ஒரு வேண்டுகோளிலேயே மெற்றோ ரயில்கள் உட்படப் பொதுப் போக்குவரத்துகளின் போது அதிகம் பேசிக்கொள்வதைக் குறைத்து அமைதி பேணுமாறு அறிவுறுத்தி உள்ளது.காற்றில் வைரஸ் பரப்பப்படுவதை இயன்றவரை குறைப்பதற்கான இலகுவான பழக்க வழக்கங்களில் இதுவும் ஒன்று என்று மருத்துவ அக்கடமி தெரிவித்துள்ளது.

பயணங்களின் போது மாஸ்க்குடனோ அதை அகற்றி விட்டோ பேசிக் கொள்வது காற்றில் கிருமி பரவி ஏனையோருக்குத் தொற்றும் வாய்ப்பு மிக அதிகம் என்று சுட்டிக்காட்டப் படுகிறது. இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஆரம்பம் முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற விதி முறைகளில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

பொது இடங்கள் உட்பட ஒன்றுக்கு மேற்பட்டோர் கூடும் இடங்களில் ஆட்களுக்கு மத்தியிலான சமூக இடைவெளித்தூரத்தை ஒரு மீற்றரில் இருந்து இரண்டு மீற்றர்களாக அதிகரிக்குமாறு பிரான்ஸின் பொதுச் சுகாதார உயர்அதிகார சபை(Haut Conseil pour la santé publique) பரிந்துரைத் துள்ளது.

ஆனால் எல்லா இடங்களிலும் இது சாத்தியமா என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.உணவு உண்பதற்கோ அல்லது புகைப்பதற்கோ மாஸ்கை அகற்றும் சந்தர்ப்பங்களில் இரண்டு மீற்றர் சமூக இடைவெளி பேணுவது தொற்றுக்கான வாய்ப்பை குறைக்கும் என்று சுட்டிக்காட்டப் பட்டுள்ளதுசாதாரண துணியினால் தைக்கப்படுகின்ற மாஸ்க் வகைகள் உட்பட தரம் இரண்டு (category 2) வகைக்குள் அடங்கும் மாஸ்க் வகைகளுக்குப் பதிலாகத் தரம் ஒன்றினுள் (category 1) அடங்கும் மாஸ்க்குகளை அணிய வேண்டும் என்பதை அதிகார சபை ஏற்கனவே பரிந்துரைத்துள்ளது.

வேகமாகப் பரவிவரும் புதிய வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்புப் பெறும் நோக்குடன் இந்தப் புதிய விதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

பொது இடங்களில் துணியில் தைக்கப்பட்ட மாஸ்க்குகள் அணிவது விரைவில் நிறுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் தொலைக்காட்சி ஒன்றுக்குத் தெரிவித்தார்.சுகாதார அதிகார சபையின் இந்தப் பரிந்துரைகளை முறைப்படி நடைமுறைப் படுத்துகின்ற அறிவிப்புகளை அரசு விரைவில் வெளியிடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *