இன்றிரவே டொனால்ட் டிரம்ப் மீதான “கிளர்ச்சி செய்யத் தூண்டினார்” என்ற வழக்கு முடிவடையலாம்.

ஜனவரி 06 ம் திகதி அமெரிக்காவின் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் புகுந்து வன்முறையிலிறங்கிய டிரம்ப்பின் ஆதரவாளர்கள், அங்கே வரமுதல் பங்குபற்றிய டிரம்ப்பின் கூட்டத்தில் அவரது வாக்குகளால் உசுப்பேற்றப்பட்டார்களா (incitement to rebellion) என்று இன்று செனட் சபை தீர்மானிக்கும் சந்தர்ப்பம் உண்டு.

வியாழனன்று வரை டெமொகிரடிக் கட்சியாளர்கள் டிரம்ப்பின் வார்த்தைகள் எப்படி அவரது ஆதரவாளர்களுக்கு உற்சாகமூட்டித் திட்டமிட்ட வன்முறையில் ஈடுபடவைத்தது என்ற வாதங்களை முன்வைத்தார்கள். அத்துடன் பாராளுமன்றக் கட்டடக் கண்காணிப்புப் படங்களையும் காட்டி அன்றைய உப ஜனாதிபதி மைக் பென்ஸ் உட்பட்ட  பாராளுமன்ற உறுப்பினர்கள் மயிரிழையில் அந்த வன்முறையாளர்களிடம் எப்படித் தப்பினார்கள் என்பதையும் விளங்கப்படுத்தினார்கள்.

10 ம் திகதி வெள்ளியன்று டொனால்ட் டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் தமது வாதங்களை முன்வைத்து டிரம்ப் பாவித்த வார்த்தைகள் எல்லாமே அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி எந்த ஒரு அமெரிக்கனுக்கும் கிடைக்கும் கருத்து, பேச்சுச் சுதந்திரத்துக்கு உட்பட்டதே என்று காட்ட முயன்றார்கள். 

டிரம்ப்பின் வழக்கறிஞர்களுக்குத் தமது வாதங்களை முன்வைக்க 16 மணித்தியாலங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவற்றில் மூன்று மணிகளை மட்டுமே அவர்கள் பாவித்தார்கள். அந்தச் சமயத்தில் அவர்கள் முக்கியமான ஆதாரமாக உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உட்பட்ட டெமொகிரடிக் கட்சித் தலைவர்கள் பலர் டிரம்ப் பாவித்த “போராடுங்கள்,” [fight] என்ற வார்த்தையை வெவ்வேறு சமயங்களில் பாவித்துத் தமது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தினார்கள் என்பதைக் காட்ட 10 நிமிடப் படத் தொகுப்பை உபயோகித்தார்கள். அதன் மூலம், டிரம்ப்பும் அதே போலவே அவ்வார்த்தையைப் பாவித்தாரே தவிர வன்முறைக்குத் தூண்டிவிடவில்லை என்று வாதித்தார்கள்.

டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் தமது முழு நேரத்தையும் எடுக்காத பட்சத்தில் இன்றே செனட் சபையில் வாக்கெடுப்பு நடைபெறலாம். தொடர்ந்தும் இருக்கும் முக்கிய சந்தேகம் ரிபப்ளிகன் கட்சியிலிருந்து டிரம்ப்பைத் தண்டிக்கத் தேவையான 17 வாக்குகளையாவது டெமொகிரடிக் கட்சியினர் பெறுவார்களா என்பதாகும். அது நடக்காத பட்சத்தில் டிரம்ப்பைத் தண்டிக்க முடியாது.

அமெரிக்கச் சரித்திரத்தில் இரண்டு முறை அரசியலமைப்புச் சட்டத்துக்கெதிராக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டவர், பதவி இறங்கியபின்னரும் அதே காரணத்துக்காக நீதியின் முன்னர் நிறுத்தப்பட்டவர், இரண்டு தடவைகளும் நிரபராதியாகக் காணப்பட்டவர் போன்ற பெருமைகளெல்லாம் டிரம்ப்புக்குக் கிடைக்கும். அதன் மூலம் அவர் தனது ஆதரவாளர்களிடையே மேலும் அதிக பலத்தைப் பெறக்கூடும், 2024 ஜனாதிபதித் தேர்தலில் நிற்கவும் வாய்ப்புக் கிடைக்கலாம்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *