பிரெஞ்சுத் தலைவரின் “அறிவுபூர்வமான இஸ்லாம்” என்ற பெயரிலான கோட்பாடுகளை அங்கிருக்கும் முஸ்லீம் தலைவர்கள் சிலர் வரவேற்கிறார்கள்.

சமீப வருடங்களாக பிரான்ஸில் வாழும் பிரான்ஸ் மக்களுக்கும் இஸ்லாமிய சமூகத்தினருக்குமிடையே ஏற்பட்டிருக்கும் பிளவுகளின் ஒரு விளைவாகப் பல தீவிரவாதத் தாக்குதல்கள் நாட்டில் ஏற்பட்டிருக்கின்றன. அதையடுத்து பிரான்ஸின் குடியரசுக் கோட்பாடுகளுக்கு ஏற்றபடி நாட்டில் இயங்கக்கூடியதாக இஸ்லாமியக் கோட்பாடுகளைத் தெளிவுபடுத்த பிரெஞ்ச் அரசு திட்டமிட்டது.

முக்கியமாக, தனது வகுப்பில் மனிதர்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றித் தெளிவுபடுத்துவதற்காக இஸ்லாம் பற்றிய விவாதங்களை நடாத்திய ஆசிரியர் சாமுவேல் பத்தியைத் திட்டமிட்டுச் சில இஸ்லாமியத் தீவிரவாதிகள் கொடூரமாகக் கொலை செய்தது பிரெஞ்சுச் சமூகம் கொதித்தெழுந்தது. அதனால் பிரான்ஸில் வாழும் முஸ்லீம்களுக்கு அவர்கள் பிரான்ஸ் குடியரசின் கோட்பாடுகளை அனுசரித்து வாழ்வது அவசியமென்பதைத் தெளிவுபடுத்துவது அவசியமென்று ஜனாதிபதி மக்ரோன் முடிவுசெய்தார்.

அதன்படி அதற்கான ஒரு அடிப்படைப் பத்திரத்தை செதுக்குவதென்று முடிவெடுத்த மக்ரோன் அதை நாட்டின் இஸ்லாமியத் தலைவர்களின் பார்வைக்கனுப்பியிருந்தார். “குடியரசுக்கும், பிரெஞ்சு இஸ்லாத்துக்குமான ஒரு அத்திவாரம்” என்ற தலைப்பிலிருக்கும் அதில் “வெளிநாடுகளின் தலையீட்டை மறுதலித்தல் அரசியல் இஸ்லாத்தை வளரவிடாமல் தடுத்தல், துருக்கியிலிருந்து தேசியவாதம் பரவாமல் தடுத்தல்,” ஆகியவை தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன.

குறிப்பிட்ட பட்டயத்தை ஏற்றுக்கொள்வதாக இமாம்கள் கையெழுத்திடவேண்டும். பிரான்ஸில் அவர்கள் கற்று இமாமாகச் செயற்படச் சான்றிதழ் பெறவேண்டும். ஆண், பெண்களுக்கு இடையிலான சமத்துவத்தை ஏற்றுக்கொள்வதாகவும் இனவாதம், ஒதுக்கிவைத்தல், பெருவெறுப்பு ஆகியவற்றை மறுப்பதாகவும் அவர்கள் உறுதியளிக்கவேண்டும். அத்துடன் அந்தச் சாசனம் “முஸ்லீம்கள் அரசின் இனவெறிக்குப் பலியாகிறார்கள், என்று குறிப்பிடுவது அவதூறுக்குச் சமமானது,” என்றும் குறிப்பிடுகிறது. 

சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் சாசனம் எதிர்பார்த்தது போலவே சில குறிப்பிட்ட முஸ்லீம்களிடையே நம்பிக்கையைப் பெறவில்லை. அதே சமயம் சில வலதுசாரிகளின் அலட்சியமாக விமர்சனங்களையும்  பெற்றிருக்கிறது. குறிப்பிட்ட சாசனம் தொடர்ந்தும் விவாதிக்கப்பட்டு ஒரு அறுதியான முடிவு எடுக்கப்படும். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *