சவூதி அரேபியா, எமிரேட்சுக்கான ஏவுகணைகள் விற்பனையை நிறுத்துகிறது இத்தாலி.

சவூதி அரேபியாவுக்கு உறுதி கூறப்பட்டவைகளில் 12,700 ஏவுகணைகளை அனுப்புவதை இத்தாலி நிறுத்தியிருக்கிறது என்று அறிவிக்கப்படுகிறது. காரணம், சவூதி அரேபியாவும், எமிரேட்ஸும் சேர்ந்து யேமனில் நடாத்திவரும் போரில் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மனித குல அழிவும், பொருளாதாரச் சீர்குலைவுமாகும்.

2016 ம் ஆண்டு சுமார் 485 மில்லியன் டொலர்களுக்கு 20,000 ஏவுகணைகளைச் சவூதி அரேபியாவுக்கு விற்பதாக அன்றைய இத்தாலிய அரசு உறுதி கூறியிருந்தது. அவைகளில் ஒரு பகுதி ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டது. அவ்வரசின் பிரதமரான மத்தியோ ரென்ஸி சமீபத்தில் சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்ததுமன்றி அங்கே பட்டத்து இளவரசன் “மிகப்பெரும் நவீன மாற்றங்களை,” ஏற்படுத்துவதாகவும் புகழ்ந்திருந்தார்.

சவூதி விஜயத்துக்காகவும், யேமனில் படு மோசமான அழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சவூதிய பட்டத்து இளவரசனைப் போற்றியதுக்கு மட்டுமன்றி வேறு உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளுக்காகவும் தற்போது மத்தியோ ரென்ஸியின் அரசு பதவியிலிருந்து விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. யேமனில் சவூதி அரேபியா நடத்தும் போரினால் நாட்டின் 80 விகிதமான மக்கள் அடிப்படைத் தேவைகளுக்காக மனிதாபிமான உதவிகளையே நம்பியிருக்கவேண்டியதாக்கப்பட்டதாக ஐ. நா கடுமையாக விமர்சித்து வருகிறது.

அமெரிக்காவில் புதிதாகப் பதவியேற்றிருக்கும் ஜோ பைடன் அரசும் எமிரேட்ஸ், சவூதி அரேபியாவுடனான தமது வர்த்தக, அரசியல் தொடர்புகளை மறுபரிசீலனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.  https://vetrinadai.com/news/f-35-deal-biden/

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *