டிரம்ப் பதவி விலக முதல் இன்னுமொரு முஸ்லீம் நாடு இஸ்ராயேலுடன் கைகுலுக்கும்.

முதல் முதலாக மொரோக்கோவுக்குப் பறந்திருக்கும் இஸ்ராயேலிய விமானத்தில் டிரம்ப்பின் மருமகன் குஷ்னருடன் சென்று அங்கு இராஜதந்திரத் தொடர்புகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இஸ்ராயேலிய அமைச்சர் விரைவில் ஐந்தாவது முஸ்லீம் நாடும் தம்மை நெருங்கிவரும் என்றார்.

இது பற்றி இஸ்ராயேலின் பிராந்தியக் கூட்டுறவு அமைச்சர் ஒபிர் அகுனிஸ் பேசும்போது “மிக விரைவில் இஸ்ராயேலுடன் நட்பாகப்போகும் ஐந்தாவது முஸ்லீம் நாடு பற்றிய அறிவித்தல் அமெரிக்காவிலிருந்து வெளியாகும்,” என்று தெரிவித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அது எந்த நாடாக இருக்கும் என்ற அரசியல் ஆரூடங்கள் பரவி வருகின்றன.

“பலஸ்தீனப் பிரச்சினைக்குச் சுமுகமான தீர்வு கிடைக்கும்வரை இஸ்ராயேலை ஒரு நாடாகவே அங்கீகரிக்கமாட்டோம்,” என்று சூளுரைத்திருக்கும் ஈரான், இந்தோனேசியா, பாகிஸ்தான் ஆகியவைகளிலொன்றாக அது இருக்க வாய்ப்பில்லை. சவூதி அரேபியா தற்சமயம் தனது நெருங்கிய நட்பு நாடுகளான பஹ்ரேன், எமிரேட்ஸ் ஆகியவை இஸ்ராயேலுடன் நெருங்குவதற்கு உற்சாகம் கொடுத்து வந்தாலும் தற்போதைக்குப் பகிரங்கமாக இஸ்ராயேலுடன் கைகுலுக்கப்போவதில்லையென்று தெரிகிறது.

உடைந்து போயிருக்கும் மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய பிரச்சினையான கத்தார் – சவூதி அரேபியா ஆகியவைகளை நெருங்கவைக்கும் கடைசிக்கட்ட முயற்சிகளை எடுத்துவரும் குவெய்த்தும் தற்போதைக்கு இஸ்ராயேலுடன் கைகுலுக்கப்போவதில்லை.

மீதமிருக்கும் நாடு ஓமான். அனேகமாக இப்பிரச்சினைகளிலெல்லாம் எவருடைய பக்கத்திலும் சேராமல் தனது நடுமையை எப்போதும் பேணிவரும் நாடான ஓமான் விரைவில் இஸ்ராயேலின் ஐந்தாவது முஸ்லீம் நண்பனாகலாம்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *