பொழுதுபோக்குக்காகச் சுவீடனில் குடிசைகள் வைத்திருப்பவர்கள் நோர்வே அரசின் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வெற்றி!

கொரோனாத் தொற்றுக்களைத் தவிர்ப்பதற்காக நோர்வே அரசு நீண்ட காலமாகப் பேணிவரும் கட்டுப்பாடுகளிலொன்று சுவீடனுக்குப் போய்விட்டுத் திரும்பும் நோர்வீஜியர்கள் வீடு திரும்பியதும் 14 நாட்கள் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதாகும். அந்தக் கட்டுப்பாட்டை எதிர்த்து நோர்வீஜியர்கள் நாட்டின் நீதிமன்றத்தில் நீதி கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார்கள்.

சுவீடனில் பொழுதுபோக்குக்காக குடிசைகள், வீடுகள் வைத்திருப்பவர்களின் தனிமனித சுதந்திரத்தில் நோர்வீஜிய அரசின் கட்டுப்பாடுகள் குறுக்கிடுகின்றன. அக்குறுக்கீட்டினால் அவர்கள் சுதந்திரமாக நடமாடலாம் என்ற உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது என்று நோர்வீஜிய நீதிமன்றம் நோர்வே அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்திருக்கிறது. அத்துடன் குறிப்பிட்ட நோர்வீஜியர்களின் சொத்தை அவர்கள் பாவிப்பதையும் நோர்வே தடை செய்திருக்கிறது என்கிறது தீர்ப்பு.

வெளிவந்திருக்கும் தீர்ப்பு பாவனைக்கு மார்ச் மாதம் வருகிறது. அதுவரை தொடர்ந்தும் சுவீடனில் வீடுகள் வைத்திருக்கும் நோர்வீஜியர்கள் தமது நாட்டின் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை அனுசரிக்கவேண்டும்.

தீர்ப்பை எதிர்த்து தாம் மேன்முறையீடு செய்யப்போவதாக நோர்வே அரசு அறிவித்திருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *