பிரென்ச் மாணவிகளின் மாதவிடாய் கால அச்சத்தை நீக்க அரசு நடவடிக்கைசுகாதாரப் பொருள்கள் இலவசம்.

மாணவிகளின் மாதவிடாய் கால அச்ச உணர்வை (menstrual insecurity) நீக்குவதற்காக கல்வி நிறுவனங்களில் சுகாதாரப் பயன்பாட்டுப் பொருள்களை (sanitary napkins) அரசு இலவசமாக வழங்க உள்ளது.

பெண்கள் குறிப்பாக பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவிகள் மாதவிடாய் காலப்பகுதியில் எதிர்கொள்கின்ற பாதுகாப்பற்ற உணர்வின் பாதிப்புகள் குறித்து பல தரப்புகளில் இருந்து நீண்டகாலமாக எழுப்பப்படும் குரல்களை செவிமடுத்தே அரசு இந்த நடவடிக் கையை எடுக்கவுள்ளது.

மாதவிடாய் சுகாதாரப் பொருள்களை (sanitary napkins) இலவசமாகப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் வரும் வாரங்களில் தொடங்கப்படும் என்று அதிபர் மக்ரோன் தனது முகநூல் பதிவு ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

“நீண்டகாலமாக நீடித்துவருகின்ற- வெளியே தெரியாத – மாணவிகளின் அந்த அச்ச உணர்வு இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு அநீதி ஆகும்” -என்று மக்ரோன் குறிப்பிட்டிருக் கிறார்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களது நலன்களைக் கவனிக்கின்ற CROUS (Centre régional des œuvres universitaires et scolaires) என்ற அமைப்பு கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு மாதவிடாய் பாதுகாப்புப் பொருள்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை வரும் வாரங்களில் ஆரம்பிக்க உள்ளது.

எதிர்வரும் செப்ரெம்பரில் புதிய கல்வி ஆண்டு ஆரம்பமாகும் போது சகல பல்கலைக்கழகங்களின் மாணவிக ளுக்கும் இந்த வசதி கிடைக்கும் என்று உயர் கல்வி அமைச்சர் Frédérique Vidal மாணவர் சங்கங்களுடனான சந்திப்பு ஒன்றில் உறுதி அளித்துள்ளார்.

பிரான்ஸின் கல்லூரிகள் மற்றும் உயர்தர வகுப்பு மாணவிகளுக்கு (collégiennes et les lycéennes) இந்த இலவச வசதியை வழங்குவதற்காக அரசு கடந்த வருடம் ஐந்து மில்லியன் ஈரோக்களை ஒதுக்கி இருந்தது.

இதன்படி தானியங்கி முறையிலான விநியோக இயந்திரப் பொறிமுறை மையங்கள்(distributors)நிறுவப்பட்டு அவற்றின் ஊடாக மாதவிடாய் சுகாதாரப் பொருள்களை மாணவிகள் தாங்களா கவே இலவசமாகப் பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.
இதற்காக பல்கலைக்கழகங்களில் மொத்தம் 1,500 விநியோக இயந்திரங்கள் (distributors) நிறுவப்பட உள்ளன.

நாடெங்கும் பெண்களது நலன் கருதி பொது இடங்களிலும் இத்தகைய விநியோக இயந்திரங்களை நிறுவி மாதவிடாய் சுகாதாரப் பொருள்களை விநியோகிக்க வேண்டும் என்ற பெண் உரிமை அமைப்புகளின் கோரிக்கை யையும் அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *