நீரிழிவு நோய்க்குப் பாவிக்கப்படும் மருந்தொன்று உடல் பருமனைக் குறைக்க உதவுமென்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

“உடல்பருமனைக் குறைப்பதற்கான போராட்டத்தில் இது மிகப்பெரிய ஒரு வெற்றி,” என்று New England Journal of Medicine சஞ்சிகையில் தமது ஆராய்ச்சியின் விபரங்களை வெளியிட்டிருக்கிறார்கள் நோர்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள். 

உடலில் இன்ஸுலினை அதிகரிப்பதற்காக நீரிழிவு நோயாளிகளிடையே பாவிக்கப்படும் Semaglutide என்ற மருந்தே உடல் பருமனைக் குறைக்கவும் பயன்படுகிறது. அது இன்ஸுலினை கூட்டும் அதே சமயம் பசியையும் மட்டுப்படுத்திவிடுவதே உடல் பருமனைக் குறைப்பதற்கான காரணமென்று ஊகிக்கப்படுகிறது. மருந்தின் செயற்பாடு மூளையை ஏமாற்றிப் பசியைக் குறைவாகக் காட்டுவதால் அந்த விளைவு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

நடாத்தப்பட்ட ஆராய்ச்சியில் பங்கெடுத்துக்கொண்டவர்களில் மூன்றிலொரு பங்கினர் தமது உடல் நிறையில் 20 விகிதத்தாலும் நாலிலொரு பங்கினர் 10 விகிதத்தாலும் குறைந்திருந்தார்கள். மிச்சப் பேருக்கு பொய்யான திரவம் கொடுக்கப்பட்டது. 16 நாடுகளைச் சேர்ந்த 2,000 பேர் இந்த ஆராய்ச்சியில் பங்குகொண்டிருந்தார்கள். 

இந்த மருந்தப் பாவித்தவர்கள் பக்க விளைவாக மெலிதான தலைச் சுற்று, வாந்தி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்றவற்றை உணர்ந்தார்கள். 

அமெரிக்காவின் மருந்துகளை அனுமதிக்கும் அமைப்பிடம் இந்த மருந்தை உடல்பருமனைக் குறைக்க விரும்புகிறவர்களுக்குப் பாவிக்க அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *