கொவிட் 19 ஒரு உயிரியல் போரென்று நம்பி, அனுமதிக்கப்படாத மருந்தை வாங்கிய தென்னாபிரிக்க இராணுவம்.

ஜனாதிபதி சிரில் ரமபோசா ஏப்ரல் 2020 இல் நாடு முழுவதிலும் பொது முடக்கத்தை அறிவித்தார். அச்சமயத்தில் கொவிட் 19 தொற்றுநோய் என்பது ஒரு உயிரியல் போர் என்று நம்பித் தென்னாபிரிக்க இராணுவம், தனது படையினரையும் அவர்களின் குடும்பத்தினரையும் பாதுகாக்க சட்டத்துக்கெதிரான, அவ்வியாதிக்கெதிராகப் பயன்படாத ஒரு மருந்தைப் பெருந்தொகை கொடுத்து வாங்கியிருக்கிறது. 

கியூபாவிலிருந்து Heberon Interferon alfa-2b என்ற மருந்தை தென்னாபிரிக்காவின் இராணுவத் தலைமை சுமார் 17.7 மில்லியன் டொலர்களைக் கொடுத்து வாங்கியிருக்கிறது வியாதிக்கெதிராகப் பாவிக்க. அந்த மருந்தோ கொவிட் 19 க்கெதிராகப் பாவிக்கலாமா என்று ஏற்கனவே உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பால் பரிசீலிக்கப்பட்டுப் பிரயோசனமற்றது என்று கணிக்கப்பட்டதுடன் தென்னாபிரிக்காவில் தடை செய்யப்பட்டும் இருக்கிறது. 

அந்த மருந்து பெருமளவில் கொள்வனவு செய்யப்பட்டது இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. அவை கொள்வனவு செய்யப்பட்ட விபரங்களை அறிய நடந்துகொண்டிருக்கும் விசாரணைகளின் மூலம் நாட்டின் பாதுகாப்பு அமைச்சருக்கோ, நாட்டின் மருந்துகளை அனுமதிக்கும் திணைக்களத்துக்கோ அதுபற்றிய முழு விபரங்களும் பகிரப்படவிலலையென்றும் தெரியவருகிறது. பாதுகாப்பு அமைச்சர் தான் அவை தென்னாபிரிக்காவில் அவை தடை செய்யப்பட்டிருப்பதை அறியாமல் வாங்க அனுமதித்ததாகவும், ஆனால், அவைகளின் தொகையைப் பற்றிச் சந்தேகப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.

அந்த மருந்துகளின் கொள்வனவு பற்றிய மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள, தான் ஒரு தனிக் குழுவை நியமிப்பதாகவும் அது விசாரணை முடிந்து வெளியிடும் உண்மைகளை அறிந்த பின்னரே மேல் கொண்டு பதிலளிக்க முடியும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் நொஸிவிவே மபீஸா தெரிவித்திருக்கிறார். 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *