திருக்குறளை ஐரிஷ் மொழியில் மொழிபெயர்க்க ஆரம்பம்

உலகப் பொதுமறையான திருக்குறளை ஐரிஷ் மொழியில் மொழிபெயர்ப்பதற்கான ஏற்பாடு அண்மையில் பெருமெடுப்போடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகம்  நடாத்திய திருக்குறள் பெருவிழாவில், கல்வியலாளர்கள் முன்னிலையில் இந்த பெருமுன்னெடுப்புகான திட்டத்தை மிகப்பெரும் விழாவாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது மெய்நிகர்(Online) நிகழ்வாக இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில தமிழ்நாடு அரசின் தமிழ் ஆட்சி மொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் அவர்கள் கலந்துகொண்டு திருக்குறள் – ஐரிஷ் மொழிபெயர்ப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்து, விழாத் தலைமையுரையும் ஆற்றியிருந்தார். தமது தலைமையுரையில் அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழகத்தின் தமிழ்ப் பணியைப் பெரிதும் பாராட்டிய அமைச்சர் பாண்டியராஜன், திருக்குறளை – ஐரிஷ் மொழியில் மொழிபெயர்க்கத் தமிழ் வளர்ச்சித் துறை, ஆதரவை வழங்கும் எனவும் தெரிவித்தார்.

மெய்நிகர் தளத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்ட இவ் விழாவில் திரைப்படப் பின்னணிப் பாடகர் அனந்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார்.  அயர்லாந்து தமிழ்க் கல்விக் கழகத்தின் முதல்வர் இராசகுமாரன் வரவேற்புரை வழங்கினார். அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழக முதன்மை ஆலோசகர் தமிழ்மைந்தன் ஜான் ரிச்சர்டு அமைச்சர் பாண்டியராஜனை வரவேற்றுப் பேசினார்.

மேலும் இவ்விழாவில், திருக்குறளுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்த திருக்குறள் தூயர் முனைவர். மோகனராசு அவர்களை ஆலோசகர் மற்றும் தன்னார்வ ஆசிரியர் குறள்இனியன் அறிமுகம் செய்து வைக்க, அவர் திருக்குறள் காட்டும் வாழ்வியல் நெறிமுறைகள் குறித்துச் சிறப்புரை வழங்கினார். பேராசிரியர் கவிமுரசு அப்துல் காதர் மற்றும் ஹார்வர்டு தமிழிருக்கை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜானகிராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழார்வலர்கள், தமிழறிஞர்கள், அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழக தன்னார்வ ஆசிரியர், பெற்றோர் மற்றும் மாணாக்கர் இணையம் வழியாக இவ்விழாவைக் கண்டு மகிழ்ந்தனர்.

முன்னதாக, ஜனவரி 9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை கொண்டாடப்பட்ட திருக்குறள் வாரத்தின் ஒவ்வொரு நாளிலும் உலகின் பல்வேறு அறிஞர்கள் திருக்குறள் முன்னுரை வழங்க, அயர்லாந்து தமிழ்க் கல்விக்கழக மாணாக்கர் திருக்குறள் பொழிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *