தனது கட்சிக்குள்ளிருந்து தன்னை விமர்சித்தவர் மீது டிரம்ப் திருப்பித் தாக்குகிறார்.

சனியன்று அமெரிக்காவின் செனட் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஜனவரி 06 வன்முறைகளில் டொனால்ட் டிரம்ப்புக்குத் தொடர்பில்லையென்று அவர் நிரபராதியாகக் காணப்பட்டார். அதையடுத்து அவருக்கு ஆதரவாக வாக்களித்த மிச் மக்கொனால் டிரம்ப் தான் அந்த வன்முறைகளுக்கு முழுக்காரணம் என்று பேட்டிகொடுத்திருந்தார்.

செனட் சபையின் சிறுபான்மைக் கட்சியான ரிபப்ளிகன் கட்சியின் குழுத் தலைவர் மிச் மக்கொனால். அவரது மனைவி எலேன் டிரம்ப்பின் போக்குவரத்து அமைச்சராக இருந்து ஜனவரி 06 வன்முறைகளை எதிர்த்துப் பதவி விலகியவர். மிச் ஏற்கனவே டிரம்ப் தான் அந்த வன்முறையாளர்களின் நடவடிக்கைகளுக்குக் காரணம் என்று குறிப்பிட்டாலும் டிரம்ப்புக்கு எதிராக வாக்களிக்கவில்லை.

https://vetrinadai.com/news/acquitted-trump/

பதவி விலகமுதல் தான் ஆரம்பித்த அரசியல் இயக்கத்தின் (Super America PAC) சார்பாக நேற்று தொலைத்தொடர்பு மாநாடொன்றில் பேசிய டிரம்ப் மிச் மக்கொனால்லைக் கடுமையாகச் சாடினார். “மிச் ஒரு சிரிக்கத் தெரியாத, கோணல் முகத்துடன் அரசியல் ஏமாற்றுக்காரர்.(“Mitch is a dour, sullen and unsmiling political hack”).அவருடன் நெருக்கமாக இருப்பவர்கள் ரிபப்ளிகன் கட்சியின் சார்பாக மீண்டும் வெல்லமுடியாது,” என்று டிரம்ப் குறிப்பிட்டிருக்கிறார்.

மிச் மக்கொனால்லைப் போல ஒரு தலைவரை வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் ரிபப்ளிகன் கட்சிக்கார்கள் மக்களின் மதிப்பைப் பெறவோ, தேர்தலில் வெல்லவோ முடியாது என்று குறிப்பிட்ட டிரம்ப் மிச்சை அவர்கள் தூக்கியெறியவேண்டும் என்றார். செனட்டராக மிச் வரத் தான் உதவியதாகவும், அதற்காக அவர் தன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டதாகவும் டிரம்ப் விளாசினார்,

டிரம்ப்பின் இரட்டைக் குழல் துப்பாக்கியின் ஒரு குழலாக இருந்துவந்த ரூடி ஜூலியானி இனிமேல் டிரம்ப்பின் வழக்கறிஞராக இருக்கமாட்டார் என்றும் டிரம்ப்பின் உதவியாளரொருவர் தெரிவித்திருக்கிறார். நவம்பர் தேர்தலில் டிரம்ப் தோற்கவில்லை என்றும் வாக்காளர்கள் ஏமாற்றப்பட்டார்களென்றும் ஆணித்தரமாக டிரம்ப்புடன் மேடைகளில் பேசிவந்தவர் ரூடியாகும். தேர்தல்களைச் செல்லுபடியாததாக்க டிரம்ப் போட்ட வழக்குகளுக்கு மிகப்பெரிய ஊதியத்தை ரூடி பெற்றுக்கொண்டதால் டிரம்ப் அவர்மீது கொதிப்படைந்து விலக்கியதாகக் கிசுகிசு நிலவுகிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *