மனிதர்களைக் கடத்திவந்தவர்களுக்கு பிரிட்டனில் நீண்டகாலச் சிறை.

2019 இல் பிரிட்டனுக்குள் பாரவண்டி மூலம் வியட்நாம் அகதிகள் 39 பேரைக் கடத்திவந்தபோது அவர்கள் இறந்ததில் சம்பந்தப்பட்ட 4 பேருக்கு பிரிட்டனில் 13 முதல் 20 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. கொலைகள், திட்டமிட்ட மனிதக் கடத்தல்கள், அகதிகளை பாரவண்டிக்குள் சாகவிட்டமை போன்றவைகளுக்காக அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.

குறிப்பிட்ட குழு பல வருடங்களாகவே மனிதக் கடத்தல்களில் ஈடுபட்டிருந்ததாகப் பொலீஸ் விசாரணைகள் மூலம் அறிய முடிந்தது. அகதிகள் பெல்ஜியத்தில் ஸீபுருக் என்ற இடத்தில் பொருட்களை அடைக்கும் பெட்டிகளுக்குள் அடைக்கப்பட்டுப் பாரவண்டிக்குள் போடப்பட்டு அப்பாரவண்டி கப்பல் மூலமாகப் புர்பிளீட் துறைமுகத்துக்குப் பயணமானது. 

அந்த வியட்நாமிர்கள் 10.000 – 15,000 எவ்ரோக்கள் கட்டணமாக கொடுத்தார்கள். அவர்களுக்கு மிகவும் உயர்ந்த சேவை [VIP-service] கொடுப்பதாக உறுதி கூறப்பட்டது. அவர்கள் 40 செல்ஸியல் சூடான பெட்டிகளுக்குள் 12 மணிகள் பூட்டப்பட்டிருந்தார்கள். புர்பிளீட்டுக்கு அருகே அவர்கள் இறந்திருப்பதைத் தெரிந்துகொண்டார்கள் கடத்தல்காரர்கள்.

இறந்துபோன 39 பேரில் 10 பேர் இளவயதினர். மிகவும் வயது குறைந்தவனின் வயது 15 மட்டுமே. அவர்கள் வியட்நாம்  வடக்கைச் [Hà Tĩnh, Nghệ An மாகாணங்கள்] சேர்ந்தவர்கள். அப்பிராந்தியத்தில் ஏற்பட்டுவரும் சுற்றுப்புற சூழல் அழிவுகளால் பலர் புலம்பெயர்ந்து வருகிறார்கள். 

இக்கடத்தலில் ஈடுபட்ட வியட்நாமியர்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் வியட்நாம் நீதிமன்றத்தில் இரண்டரை முதல் ஏழரை வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. பிரிட்டனில் தண்டிக்கப்பட்டவர்களில் பிரிட்டர்களும், ருமேனிய – பிரிட்டிஷ் குடிமக்களும் அடக்கம்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *