வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமிடல் மாநாடு நடக்கிறது, எதிர்க்கருத்துக்கார்கள் மீது பிடியும் இறுக்கப்படுகிறது.

வரவிருக்கும் ஐந்து வருடங்களுக்கான திட்டமிடல்களை நடாத்த இவ்வாரம் வியட்நாமின் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலைநகரான ஹனோயில் கூடியிருக்கின்றனர். அச்சமயத்தில் எவ்வித அரசியல் எதிர்ப்புக்களும் கிளம்பக்கூடாதென்பதற்காக அரசை விமர்சிப்பவர்களும், எதிர்க்கட்சிக்காரர்களையும் சிறைகளில் போட்டுவிட்டார்கள்.

நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி அரசை வெவ்வேறு வகையில் விமர்சித்த 170 பேர் சிறையிலிருக்கிறார்கள். மாநாடு ஆரம்பிக்க முதல் வாரம் மூன்று பத்திரிகையாளர்களுக்கு 11 – 15 வருடங்கள் சிறைத்தண்டனை கொடுத்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. சமூகவலைத்தளங்களின் அரசாங்கத்தை விமர்சித்து அதைப் புரட்ட முயற்சி செய்த குற்றத்துக்காக அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். 

ஜனநாயகம் கோரிக் குரலெழுப்புகிறவர்கள் மீது மட்டுமன்றி நாட்டின் பிரத்தியேக மதமான காவோ டாய் பக்தர்கள் மீதும் கடுமையாகக் கண்காணிப்புச் செய்துவருகிறது. சமூகவலைத்தளமான பேஸ்புக் வியட்நாமில் பிரபலமானது. அந்த நிறுவனம் மீதும் கடுமையான கோரிக்கைகள் வைத்திருக்கிறது வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி. அவர்களுக்கு இசைந்து நடக்கும் பேஸ்புக் 2019 ஐ விட நான்கு மடங்கு அதிகமான பதிவுகளைக் களைந்தெடுத்திருக்கிறது.

கட்சி மாநாட்டில் தற்போதைய தலைவரான 76 வயது க்யான் பு த்ரொங்க் மீண்டும் தலைமைதாங்கத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். உலக நாடுகள் பலவற்றைவிட வியட்நாமின் கொரோனாத் தொற்றுக்கள் கட்டுப்பாட்டிலிருப்பதும், பொருளாதாரம் வளர்ந்திருப்பதும், லஞ்ச ஊழல்களைத் தண்டிப்பதும் த்ரொங்கின் மவுசை அதிகரித்திருக்கின்றன.

சுமார் நூறு மில்லியன் மக்களைக் கொண்ட வியட்நாமில் சுமார் 1,500 பேருக்கே தொற்று ஏற்பட்டிருப்பதும், 50 பேர் மட்டுமே இறந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 2020 லும் பொருளாதாரம் சுருங்கவில்லை, 2021 இல் ஏழு விகிதத்தால் வளருமென்று கணக்கிடப்படுகிறது. லஞ்ச ஊழல் செய்பவர்களை மிகக் கடுமையாகத் தண்டிப்பதில் நாட்டின் பொருளாதாரத் தலைநகரான ஹோ ஷி மின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் லஞ்ச ஊழல்களில் ஈடுபட்டதற்காக 31 வருடங்கள் சிறையிட்டிருக்கிறார். 

இப்படியான விடயங்களால் தன் கொடியை நாட்டில் கணிசமாக உயரமாகவே வைத்திருக்கும் த்ரொங்க் மூன்றாவது தடவையாகவும் கட்சியின் தலைவராக நாட்டை ஆளத் தெரிந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *