வட்ஸப்பிலிருந்து பல மில்லியன் பேர் வரையறைகளுள்ள சிறிய தீவுகளை நோக்கிப் புலம்பெயர்கிறார்கள்.

சுமார் ஒரு வாரத்துக்கு முன்னர் வட்ஸப் நிறுவனம் தனது பாவனையாளர்களின் விபரங்களை முன்னரை விட அதிகமாகத் தனது உரிமையாளரான பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்ளப்போவதாக அறிவித்தது. அதையடுத்து சுமார் 2 பில்லியன் பாவனையாளர்களைக் கொண்ட வட்ஸப்பிலிருந்து சில மில்லியன் பேராவது டெலிகிராம், சிக்னல் போன்ற நிறுவனங்களுக்குப் புலம்பெயர்ந்து வருகிறார்கள்.

இணையத் தொடர்புகள் மூலமாகத் தொலைபேசித் தொடர்புகளையும், குறுஞ்செய்திகளையும் அனுப்புவதற்காகப் பாவிக்கப்படும் வட்ஸப் அந்த வகைச் சேவைகளைக் கொடுப்பதில் இதுவரை உலகிலேயே மிக அதிகளவு பாவனையாளர்களாகக் கொண்டிருக்கிறது. அதேபோன்ற சேவைகளை வேறு சில குட்டி நிறுவனகள் கொடுத்து வந்தாலும் அவைகளால் வட்ஸப்புக்கு முன்னால் ஈடுகொடுக்க முடிந்ததில்லை. 

வட்ஸப் “நாம் எமது பாவனையாளர்கள் தொடர்புகொள்ளும் நிறுவனங்கள், சேவைகள் பற்றிய விபரங்களை எமது உரிமையாளரான பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ளவிருக்கிறோம்,” என்று அறிவித்ததைத் தொடர்ந்து அப்பாவிப்பாளர்களிடையே பெரும் பூகம்பமொன்று ஏற்பட்ட உணர்வு பரவியிருக்கிறது. தம்மைப்பற்றிய விபரங்களை எல்லாம் பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ளப்போகிறார்கள் என்ற எண்ணத்தில் பலர் சிக்னல், டெலிகிராம் போன்று அதே வகையான சேவைகளைக் கொடுக்கும் நிறுவனங்களுக்கு மாறிவருகிறார்கள்.

சிக்னல், டெலிகிராம் போன்ற நிறுவனங்கள் தமது பாவனையாளர்கள் தொடர்புகொள்ளும் விடயங்களை குறிகளாக மாற்றிவிடுகிறது(encrypt). எனவே பாவனையாளர்கள் தொடர்பு விபரங்களைக் குறிப்பிட்ட நிறுவனங்களே கண்காணிக்க முடியாது. எனவே, பாவனையாளர்களின் தொடர்புகள் வரையறுக்கப்பட்டு வேறெவருக்கும் தெரியாமலிருக்கும். வட்ஸப்பிலோ அவ்விபரங்கள் நிறுவனத்துக்குக் கண்காணிக்கக்கூடியதாக இருக்கும். 

மிகப்பெரிய தொகைக்கு வட்ஸப் நிறுவனத்தை பேஸ்புக் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் வாங்கியது, இன்ஸ்டகிராம் நிறுவனத்தையும் வாங்கியது. ஆனால், பொருளாதார ரீதியில் இன்ஸ்டகிராம் பேஸ்புக் நிறுவனத்துக்குக் கொடுப்பது போன்ற இலாபத்தை வட்ஸப் கொடுக்கவில்லை. எனவேதான், பேஸ்புக் இந்த மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. பாவனையாளர்களின் விருப்பங்களை ஆராய்வதன் மூலம் அவற்றை பொருளாதார ரீதியில் காசாக்கலாம் என்ற திட்டத்தில் பேஸ்புக் இறங்கியிருக்கிறது.

குறிகளாக்கபட்ட தொடர்புகளை பரிமாரிக்கொள்வதன் மூலம் பாவனையாளர்கள் பலர் தத்தம் விபரங்களை இரகசியமாக வைத்திருக்க விரும்புகிறார்கள். பேஸ்புக்கில் எழுதி எல்லோருக்கும் தெரியவைக்காமல் தமக்காக உண்டாக்கப்பட்ட சிறு சிறு குழுக்களிடையேதான் பாவனையாளர்கள் தொடர்புகொள்ள விரும்புகிறார்கள் என்பதையே இந்தப் புலம்பெயர்தல் காட்டுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *