உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு முதல் தடவையாக தடுப்பு மருந்தொன்றைப் பாவிப்புக்கு ஏற்றுக்கொண்டது.

இதுவரை உலகின் சில நாடுகள் வெவ்வேறு ஓரிரண்டு கொவிட் 19 தடுப்பு மருந்துகளைத் தத்தம் நாடுகளில் அனுமதித்துப் பாவிக்க ஆரம்பித்துவிட்டாலும் முதல் தடவையாக உலக ஆரோக்கிய அமைப்பு வியாழனன்றுதான் முதல் தடவையாகப் பாவிக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது. 

“உலகளாவிய அளவில் கொவிட் தடுப்புமருந்தை உறுதி செய்வதற்கான ஒரு சாதகமான நடவடிக்கை இது. ஆயினும் உலகெங்கும் தடுப்பூசிக்கான முன்னுரிமை பெறவேண்டிய மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமான தடுப்பூசி விநியோகத்தை அடைய இன்னும் பெரியளவில் நாம் பாடுபடவேண்டுமென்ற அவசியத்தை நான் வலியுறுத்த விரும்புகிறேன்,” என்று கூறி Pfizer/BioNTech நிறுவனத்தின் தடுப்பூசியை உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு ஏற்றுக்கொண்டிருப்பதை வெளியிட்டார் டாக்டர் மரியாஞ்சலா சிமியாவோ.

அத்தடுப்பு மருந்தினை அவசரகாலப் பாவிப்புக்கு அனுமதிக்கும் அதே சமயத்தில் வேறு தடுப்பு மருந்துகளைப் பற்றியும் தாம் வேகமாகப் பரிசீலனை செய்வதாகவும், அவர் உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் சார்பாகத் தெரிவித்திருக்கிறார்.

கொவக்ஸ் எனப்படும் உலகின் 190 நாடுகளின் கூட்டுறவு அமைப்பின் மூலம் முடிந்தளவு பல நாடுகளுக்கும் தேவையான அளவு தடுப்பு மருந்துகளைக் கிடைக்கச் செய்வதற்காக உலக மக்கள் ஆரோக்கிய அமைப்புக்கு ஐரோப்பிய ஒன்றியம் 500 மில்லியன் எவ்ரோக்களைக் கொடுத்திருக்கிறது. இதன் மூலமாக வறிய மற்றும் வளரும் நாட்டு மக்களுக்காகச் சுமார் ஒரு பில்லியன் தடுப்பு மருந்துகள் கிடைக்க வழி செய்யப்படும். 

குறிப்பிட்ட ஒரு பில்லியன் தடுப்பு மருந்துகள் முதல் கட்டமாக வறிய மற்றும் வளரும் நாடுகளிலுள்ள மருத்துவ சேவையாளர்கள், பலவீனமாக மக்கள் போன்ற முதன்மைத் தேவையுள்ளவர்களுக்கு வழங்கப்படும். 

சிறீலங்காவைப் பொறுத்தவரை கொவக்ஸ் மூலமாக நாட்டின் 20 விகித மக்களுக்குத் தடுப்பு மருந்துகள் கிடைக்கவிருப்பதாக நாட்டின் தொற்று நோய்த்தடுப்பு ஆராய்ச்சி திணைக்களத்தின் முதன்மை நிர்வாகி சுதத் சமரவீர தெரிவித்தார். இவ்வருட முதற் பகுதிக்குள் அந்த மருந்துகள் கிடைக்கும் என்று குறிப்பிட்ட அவர் சிறிலங்காவின் முதன்மைப்படுத்த தேவையாளர்கள் யாரென்பதைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *