இந்தியாவின் சுதந்திரப் போராட்டக் காலத்தின் பின்னர் முதல் முறையாக ஒரு பெண் கைதி தூக்கிலிடப்படவிருக்கிறார்.

தன் காதலுக்குக் குறுக்கே நின்ற குடும்பத்தவர் ஏழு பேரைக் கொன்றதற்காக மரண தண்டனை பெற்ற உத்தர்பிரதேசத்தைச் சேர்ந்த ஷப்னம் என்ற பெண் இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பின்னர் தூக்கில் போடப்படவிருக்கும் முதலாவது பெண் என்று கருதப்படுகிறது.

ஷப்னத்தைத் தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் மதுராவிலிருக்கும் மரண தண்டனைக் கைதிகளின் சிறைப்பகுதியில் நடந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. அந்த ஏற்பாடுகள் டெல்லி கூட்டுக்கற்பழிப்புக் குற்றவாளிகளின் மரண தண்டனையை நிறைவேற்றிய பவன் ஜல்லாத் தலைமையில் நடந்து வருகின்றன. 

ராம்பூர் சிறையிலிருக்கும் ஷப்னத்தை அடிக்கடி சென்று சந்திப்பவன் இப்போது 12 வயதான மகன் தாஸ் ஆகும். தாயின் கொலைத்தண்டனையை நிறைவேற்றுவதற்கான கையெழுத்தை ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் போடவிருக்கும் இத்தருணத்தில் தனது தாயை மன்னித்துக் கொலைத்தண்டனையை நிறுத்தும்படி மகன் விண்ணப்பித்திருப்பதாகத் தெரிகிறது.

பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஷப்னம் உயர்கல்வி கற்றுத் தேர்ந்து ஆசிரியையாக இருந்தவள். 2008 இல் கொலைகள் நடந்தபோது ஷப்னத்துக்கு சுமார் 20 வயதாகும். அவள் சலீம் என்ற ஒருவனை இரகசியமாகக் காதலித்தாள். ஆனால், அதற்கு அவளது வீட்டார் சம்மதம் கொடுக்கவில்லை.

சுன்னி முஸ்லீம்களில் ஒரு பகுதியான ஷைபியைச் சேர்ந்தவர்கள் ஷப்னத்தின் குடும்பத்தினர். காதலன் சலீம் பட்டான் எனப்படும் இனத்தவன். தனது காதலை அங்கீகரிக்காத குடும்பத்தினர் மீது ஏற்பட்ட கோபத்தாலேயே ஷப்னம் ஒரே வீட்டில் வாழ்ந்த தனது பெற்றோர், சகோதரன் குடும்பத்தினருட்பட்ட ஏழு பேரைத் தனது காதலனுடன் சேர்ந்து செய்திருப்பதாகத் தெரிகிறது. 

கொலைகள் நடந்த சமயம் ஷப்னம் ஏழு வாரங்கள் கர்ப்பிணி. நள்ளிரவில் தங்கள் வீட்டில் யாரோ வந்து கொலைகள் செய்ததாக அவள் கூக்குரலிட்டிருக்கிறாள். ஆனால், சலீமைக் கூப்பிட்டு தான் ஏற்கனவே தூக்கமருந்தைப் போட்டுத் தூங்கவைத்திருந்த அவர்களின் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருப்பது பின்னர் தெரியவந்தது.

ஷப்னம் சிறையிலிருக்கும்போது தனது  மகன் தாஸைப் பெற்றாள். ஆறு வயதுவரை அவளுடன் சிறையில் வாழ்ந்த மகனைக் கிராமத்தைச் சேர்ந்த அவளுடன் கூடப்படித்த ஒருவர் தத்தெடுத்திருக்கிறார். அவளது மரண தண்டனை நிறைவேறப்படுமா என்பது விரைவில் தெரியவரும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *