யேமன் அகதிகள் முகாம் மீது சவூதி அரேபிய விமானத் தாக்குதலினால் 100 க்கும் அதிகமானோர் இறப்பு.

யேமன் சாடா நகரிலிருக்கும் அகதிகள் முகாமொன்றின் மீது வெள்ளியன்று, சவூதி விமானத்தால் குண்டுகள் பொழியப்பட்டதில் நூற்றுக்கும் அதிகமானோர் இறந்திருக்கிறார்கள். மேலும் 200 பேர் காயப்பட்டிருக்கிறார்கள் என்று செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கிறது.

இவ்வார ஆரம்பத்தில் யேமன் ஹூத்தி இயக்கத்தினர் அபுதாபியில் காற்றாடிக் குண்டுகளால் தாக்கியிருந்தார்கள். அதற்குப் பதிலடியாக சவூதி அரேபியா யேமனில் பல இடங்களில் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டது. எமிரேட்ஸில் இறந்தவர்கள் மூவர். சவூதித் தாக்குதல்கள் நூற்றுக்கணக்கானோரைப் பலிகொண்டிருக்கின்றன.

சாடா நகர் சிறையொன்று அகதிகள் முகாமாகப் பாவிக்கப்பட்டு வந்தது. ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் அந்த முகாமில் வசித்து வந்தார்கள். அவர்கள் யேமன் மூலமாக சவூதி அரேபியாவுக்கும், மற்றைய வளைகுடா நாடுகளுக்கும் செல்வதற்கு முயற்சி செய்தவர்களாகும். இறந்துபோனவர்களில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளுமே என்கிறது செஞ்சிலுவைச் சங்கம்.

சாடா நகர் தவிர ஹுடெய்டாவிலும் சவூதிய விமானங்கள் தாக்கியிருக்கின்றன. ஹுடெய்டாவில் தொலைத்தொடர்பு மையங்கள் தாக்கி அழிக்கப்பட்டிருப்பதால் யேமனின் பெரும்பாகத்தில் இணையத்தளத் தொடர்புகள் முறிந்துபோயிருக்கின்றன. எனவே, சவூதிய விமானங்கள் வேறு பகுதிகளில் தாக்கியதன் விளைவுகள் இன்னும் தெரியவரவில்லை.

சாள்ஸ் ஜெ. போமன்