மலேசியா ஈப்போ நகரில் தைத்திருநாள் பொங்கல்

மலேசியாவின் ஈப்போ நகரில், பேராக்கு மாநிலத்தில் பொங்கல் நிகழ்ச்சியை தமிழ் மரபுத்திங்களின் சமத்துவ பெருநாளாக கொண்டாடப்பட்டது.

உலகத் தமிழர் கொண்டாடும் தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள், புலம் பெயர்ந்த தமிழர்கள் பொக்கிசமாக தம் கலாச்சார பண்பாட்டை தலைமுறைகள் தெரிந்து கொண்டாட வெகு சிறப்பாக பல இடங்களில் பொங்கலிட்டு மகிழ்கின்றனர்.

சாதி மதம் கடந்து மாந்தர் குலம் ஒன்றாக இயற்கையின் ஆற்றல் வழி வாழும் விழுமியத்தை உளமறிய ஏற்று, பகலவன், ஆநிரை, உழவன் மற்றும் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கும் நன்றி நவிலும் விழாவாகக் கொண்டாடும் பெருநாள் எம் தமிழர்களின் தைத்திருநாள் தைப்பொங்கல்.

ஈப்போ நகரிலும் வேற்று இன, மத மலேசியர்களும் கொண்டாடிடும் வகையில், ஈப்போ சிட்டி எனட் கன்டிரி கிளப்பில் 14/1/2022 அன்று பொங்கல் நிகழ்ச்சி விருந்துபசரிப்புடன் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

நிர்வாக உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பு செயற்குழு உறுப்பினர்கள் (தமிழர், சீனர், மலாய்) மற்றும் இந்தோனேசிய, வங்காள நாட்டு பணியாளர்கள் சமத்துவம் பாராட்டி பாகுபாடின்றி பொங்கலிட்டு விருந்தோம்பல் ஏற்று மகிழ்ந்தனர்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பூங்குன்றனாரின் பழம்பாடலை மெய்ப்பிக்கும் வகையில், இந்த நிகழ்வு தமிழரின் மேலான உலக வாழ்வியல் மாண்புகளை பறைசாற்றுகிறது.

மத தீவிரவாதம், சாதி வேற்றுமை கொடுமைகள், மாந்த நேயம் நலிவடையும் இக்காலக் கட்டத்தில், இது போன்ற சமத்துவ நிகழ்ச்சி மாந்த நேயத்தையும் சீவகாருண்யத்தையும் நம்மிடையே மீட்சிகொண்டு வர, வழிவகுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எழுதுவது : உத்திராபதி இராமன் மலேசியா (DSP (R) Wotravathy Raman)