உலகை உலுக்கியஆறு ஒட்டகச் சிவிங்கிகள்..!

நீராகாரம் இன்றி மனிதர்கள் உயிர் துறக்கின்ற காலம் வெகு விரைவில் வரப்போகின்றது என்பதற்கு கட்டியம் கூறும் பல நிகழ்வுகள் உலகெங்கும் பதிவாகி வருகின்றன. இது ஆபிரிக்க நாடான கென்யாவில் நடந்தது.

தண்ணீர் தேடி அலைந்த ஆறு ஒட்டகச்சிவிங்கிகள் சேற்று நிலப் பகுதி ஒன்றில்ஒன்றாக உயிர் துறந்து கிடக்கின்ற இந்தப் படம் உலகெங்கும் வெளியாகிப் பல பில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. நீரின்றி விலங்குகள் உயிரிழப்பது ஆங்காங்கே நடக்கின்ற சிறு சம்பவங்கள்தான். ஆனால் முற்றாக அழிவடையும் ஆபத்து விளிம்பில் உள்ள அரிய இனச் சிவிங்கிகள் ஆறு இப்படி ஒன்றாக மடிந்து கிடந்த காட்சி உலகிற்குச் சொல்லுகின்ற செய்தி மிகப் பெரியது என்கின்றனர் சூழல் அறிவியலாளர்கள்.

தலைகள் ஒருபுறமாகவும் கால்கள் எதிர்ப்புறமாகவும் கிடக்கும் ஆறு சிவிங்கிகளதுஎலும்புகள் மீது தோல் மட்டுமே போர்த்திக் காணப்பட்டாலும் அவற்றின் முகங்களில் தண்ணீர் தாகம் இன்னமும் மறையவில்லை என்று கென்யாவின் வனவிலங்கியல் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

நீர் நிலைகளைத் தேடி நீண்ட தூரம் வந்த சிவிங்கிகள் நீர் வற்றிய சேற்றுநிலத்தில் கால்கள் சிக்கி மீட்க முடியாதஉடல் வலுவற்ற நிலையில் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளன.கென்யாவின் ஷாபுலி வனவிலங்கு சரணாலயத்தினர் (Zabuli Wildlife Sanctuary) அவற்றை மீட்டெடுத்துத் தரையில் போட்டிருந்த இந்தக் காட்சியை வான் வழிப் படமாக்கியிருப்பவர் (aerial photograph) சுயாதீனப் படப்பிடிப்பாளர் எட் ராம் (Ed Ram).அதிர்ச்சியூட்டும் அந்தப்படம் சமூக வலைத்தளங்களில் சுமார்ஐம்பது லட்சம் பேரால் பகிரப்பட்ட பிறகேசெய்தி நிறுவனங்கள் அதனைக் கண்டுகொண்டன.

கென்யா அண்மைக் காலத்தில் கடும் வரட்சியைச் சந்தித்துள்ளது. மழை வீழ்ச்சி குறைந்ததால் அங்கு தேசியஅனர்த்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வரட்சி முதலில் வன விலங்குகளையே மோசமாகத் தாக்கியுள்ளது.உணவு, நீர் இன்றி அவை வலுவிழந்து மடிந்து வருகின்றன. வரட்சியை அடுத்து விவசாயிகள் நீர் நிலைகள் அருகே விலங்குகள் அண்டாமல் வேலிகளை அமைத்துப் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுவதால் வன விலங்குகளுக்கு தண்ணீர் கிடைப்பது தடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு சூழல் பாதிப்புகள் இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான மோதலாகவும் மாறிவருகிறது.

குமாரதாஸன். பாரிஸ்.