மனித உரிமை மீறல்கள் பற்றிய கோட்டபாயாவின் வழிமாற்றத்துக்கு இந்தியாவின் கடன் காரணமா?

சிறீலங்காவில் தமிழர்கள் மீதான கடைசிக் கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய சர்வதேசத்தின் கோரிக்கைக்கு ஜனாதிபதி கோட்டபாயா செவிகொடுத்திருப்பதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. அதற்குக் காரணம் செவ்வாயன்று ஜனாதிபதி கோட்டபாயா ராஜபக்சே பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையாகும்.

“எமது நாட்டில் நடந்ததாகச் சர்வதேச அளவில் குறிப்பிடப்படும் மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய விடயங்களை நாம் எதிர்கொள்ளவேண்டும். எனது ஆட்சியில் அப்படியான குற்றங்களுக்கு நாம் இடமளிக்கவில்லை, எதிர்காலத்திலும் அப்படியான தவறுகள் நடக்க அனுமதிக்கப்படமாட்டாது,” என்று அவர் குறிப்பிட்டார்.

கொவிட் 19 காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பின்னடைவுகள் ஏற்கனவே பெருமளவில் வெளிநாட்டில் கடன்பட்டிருக்கும் சிறீலங்கா அரசுக்கு மிகப் பாரமான நிலைமையை உண்டாக்கியிருக்கின்றன. அன்னியச் செலாவணிப் பற்றாக்குறையும்,  அடைக்கப்படவேண்டிய கடன்களின் பாகங்களைத் திருப்பிக் கொடுக்கவேண்டிய தவணைகளில் அவற்றைக் கொடுக்கவேண்டிய நிலைமையும் நாட்டின் மீது பெரும் பாரமாகியிருக்கிறது.

அன்னியச் செலாவணி இன்மையால் அரசோ, தனியார் நிறுவனங்களோ நாட்டுக்கு அவசியமான பொருட்களை வெளிநாடுகளிலிருந்து வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது. முக்கியமாக எரிவாயு, எரிபொருள் ஆகியவைக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு நாட்டில் பக்க விளைவுகளாக தொழிற்சாலைகளுக்கு மின்சாரமின்மை, நாளாந்தத் தேவைக்கான எரிவாயுத் தட்டுப்பாடு போன்றவையை உண்டாக்கியிருக்கின்றன.

அடிப்படை உணவுப் பொருட்கள் மட்டுமன்றி வாழ்க்கைச் செலவு பெருமளவில் அதிகரித்திருக்கும் நிலைமையில் நாடெங்கும் மக்களிடையே அரசுக்கு ஆதரவு பெருமளவு குறைந்திருக்கிறது. தனியார் நிறுவனங்கள், அரச திணைக்களங்களும் அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து வருகின்றன.

இந்த நிலையில் சமீப வாரங்களில் சிறீலங்கா அரசு, கத்தார், சீனா, இந்தியா, ஓமான், பங்களாதேஷ், ஆகிய நாடுகளிடம் அன்னியச் செலாவணிக்காக அடிக்கடி கையேந்தவேண்டியிருந்தது. சர்வதேச நிதியத்திடம் கடன் கேட்பதானால் சிறீலங்கா அரசு அவர்களின் கோரிக்கையான போர்க்கால மனித உரிமை மீறல்கள் பற்றிய ஆராய்வுகளுக்குக் காது கொடுக்கவேண்டிவரும் என்ற நிர்ப்பந்தம் நிலவுகிறது.

ஆனாலும், நாட்டின் மின்சாரத் தயாரிப்புக்குத் தேவையான எரிபொருள் கையிலில்லாத நிலையில் மின்சார மையங்கள் நிறுத்தப்படும் என்ற நிலைமையில் அதை வாங்குவதற்காக அன்னியச் செலாவணிக்காக இந்தியாவிடம் மீண்டும் சிறீலங்கா கையேந்தியது. 

செவ்வாயன்று இந்திய அரசு மின்சாரத் தயாரிப்புக்கான எரிபொருட்களை வாங்க சிறீலங்காவுக்கு 500 மில்லியன் டொலர்களைக் கடனாகக் கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கிறது. அதற்குக் கைமாறாக இந்திய அரசு நீண்டகாலமாகக் கோரிவந்த போர்க்கால மனித உரிமை மீறல்கள் பற்றிய விடயத்தில் ஜனாதிபதி ராஜபக்சே மாறியிருப்பதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்