இன்றைய காஸா – இஸ்ராயேல் போர்நிலைப்பாட்டு வளர்ச்சியாக இஸ்ராயேலின் காலாட்படை காஸாவுக்குள் நுழையலாம்.

ஜெருசலேம் தினத்தன்று போராக மாற உருவெடுத்த இஸ்ராயேல் – பலஸ்தீன மோதலில் சமாதான விளக்குப் பிடிப்பவர்கள் எவரும் தற்போதைக்கு வெற்றியடையப் போவதாகத் தெரியவில்லை. காஸா பிராந்தியத்திலிருந்து இஸ்ராயேல் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் புதனன்றும் தொடர்ந்துகொண்டிருந்தன. பதிலுக்கு இஸ்ராயேலின் விமானப்படைகள் காஸாவைத் தாக்குவது அதிகமாகியது.

https://vetrinadai.com/news/hamas-gaza-war/

இதேபோன்ற நிலைமையொன்று 2014 இல் இஸ்ராயேலுக்கும் – காஸாவில் ஹமாஸ் இயக்கத்துக்குமிடையே உருவாகப் பலத்த சேதங்களை உருவாக்கியது. அதன் பின்னர் முதல் தடவையாக நேற்று புதனன்று மட்டும் பல ஹமாஸ் இயக்கத்தினரின் இராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. காஸா பிராந்தியத்தின் ஹமாஸ் இராணுவ உயரதிகாரியுட்படப் பத்து முக்கிய தளபதிகளாவது கொல்லப்பட்டிருக்கிறார்கள். 

இஸ்ராயேலில் பாலஸ்தீனர்கள் வாழும் பகுதிகளில் நேற்றைய தினம் பெரும் கலவரங்களின் நாளாக இருந்தது. ஒரு பக்கம் பாலஸ்தீனக் குழுக்கள், இன்னொரு பக்கம் யூதக் குழுக்கள் நகர்களெங்கும் திரிந்து வன்முறைகளில் ஈடுபட்டு எதிர்த்தரப்பாரின் உடமைகளுக்குச் சேதங்களை விளைவித்தார்கள். எதுவும் செய்யாத வழியில் போகிறவர்களை இழுத்துவைத்துத் தாக்கினார்கள்.யூதப் பழமைவாதக் குழுக்கள் மிகவும் மோசமான முறையில் பாலஸ்தீனர்களைக் கையாண்டது பற்றி இஸ்ராயேல் முழுவதும் கடும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. பிரதமர் நத்தான்யாஹு அந்த நகரங்களுக்கெல்லாம் இராணுவத்தை அனுப்பத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இம்முறை எழுந்திருக்கும் போர் நடவடிக்கைகள் பற்றி ஐ.நா-வின் பாதுகாப்புக் குழுவில் இதுவரை இரண்டு தடவைகள் சம்பாஷணைகள் நடந்திருக்கின்றன. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான எவ்வித தீர்வுகளையும் அவர்களால் எடுக்க முடியவில்லை.  நோர்வே, சீனா, துனீசியா ஆகிய நாடுகள் மூன்றாவது தடவை, வெள்ளியன்று ஒரு கூட்டத்தைக் கூட்டும்படி கேட்டிருக்கின்றன.

இஸ்ராயேலின் விமானத் தாக்குதல்களால் காஸாவில் சுமார் 70 பேராவது இறந்திருப்பதாகவும் ஐநூறுக்கும் அதிகமானவர்கள் காயப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. அவர்களில் 16 பேர் குழந்தைகளாகும். ஹமாஸின் ஏவுகணைத் தாக்குதல்களால் இஸ்ராயேலில் ஏழு பேர் இறந்திருப்பதாகவும் அதிலொன்று ஆறு வயதுப் பிள்ளையென்றும் தெரிகிறது. 

ஹமாஸ் இயக்கத்தின் காஸா நகரப் பாதுகாப்பு இராணுவத் தலைவர் உட்பட மிக முக்கியமான பத்துப் பேர் புதனன்று நடந்த இஸ்ராயேலின் தாக்குதல்களால் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. “உங்களா முடிந்தபடி, வான்வெளி, நீர் வழி, நிலவழித் தாகுதல்களை நடாத்திப் பாருங்கள். பதிலடி கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம்,” என்று ஹமாஸ் இயக்கத்தினரின் பேச்சாளர் அபு உபைதாவின் அறிக்கை குறிப்பிடுகிறது. இஸ்ராயேலின் பக்கத்திலிருந்து காஸா பிராந்தியத்தின் மீது நில வழித் தாக்குதல் நடாத்துவது பற்றிய முடிவு இன்று வியாழனன்று எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாகவே பாலஸ்தீன – இஸ்ராயேல் மோதல்கள் ஏற்படும்போது ஐரோப்பிய நாடுகளின் யூத சமூகங்களும், சினகூகாக்களும் [யூதர்களின் தேவாலயம்] தாக்கப்படுவது வழக்கம். எனவே ஐரோப்பிய நாடுகளின் சினகூகாக்கள் தமது பாதுகாப்பை அதிகரித்திருக்கின்றன. பொலீஸ் அதிகாரங்களும் யூத சமூகங்களுக்கான பாதுகாப்பைப் பலப்படுத்தி வருகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *