குர்தீஷ் நவ்ரோஸுக்கும் தீபாவளிக்கும் தொடர்பு இருக்குமா? – குர்தீஷ் மக்களின் நவ்ரூஸ் புதுவருட நாள்
நவ்ரூஸ் புதுவருட நாள்
மெஸபொத்தேமியா என்ற நாட்டைப் பற்றிச் சரித்திர பாடங்களில் படித்திருக்கிறோம். அந்த நாடு இன்றைய குவெய்த், ஈராக்கின் பெரும்பகுதியையும், சவூதி அரேபியாவின் சிறு பகுதியையும் உட்படுத்தியிருந்தது. வடக்கில் ஸாக்ரோஸ் மலைப்பிராந்தியத்தை எல்லையாகக் கொண்டிருந்த அந்த நாட்டை ஈப்ராத்ஸ், தீக்ரிஸ் நதிகளும் அதன் கிளைகளும் வளப்படுத்தின.
நல்லாட்சிகளும், கொடுங்கோலாட்சிகளும் ஒரு நாட்டு மக்களுக்கு மாறிமாறிக் கிடைப்பதுபோலவே மெஸபொதேமியருக்கும் நடந்தது. ஜாம்ஸிட் என்ற ஒரு அஸீரிய அரசன் அந்த நாட்டின் ஆட்சிக்கோலைக் கொண்டிருந்தபோது அவனுக்கு அஹ்ரிமான் என்ற ஒரு தீய ஆவியுடன் தொடர்பு கிடைக்க அவன் அதனிடம் தன் ஆன்மாவை விற்றுவிட்டான்.
விளைவாக ஜாம்ஸிட் தனக்குப் பிறகு அரசகட்டிலுக்கு வர டாஹக் என்பவனைத் தெரிவுசெய்தான். அவனோ ஜாம்ஸிட்டை இரண்டு துண்டாக வெட்டிக் கொலைசெய்துவிட்டான்.
அஹ்ரிமான் ஒரு சமையல்காரனாக உருவெடுத்து டாஹக்கிற்கு சுவையான உணவுகளைப் பரிமாறினான். அதனால் சந்தோசமடைந்த டாஹக்கிடம் அஹ்ரிமான் அவனது தோள்களில் முத்தமிட அனுமதி கேட்க அது கிடைத்தது. ஆனால் அந்த முத்தத்தின் பின் டாஹக்கின் தோள்களின் இரண்டு பக்கத்திலும் கறுப்புப் பாம்புகள் இரண்டு உருவாகின.
அதனால் பயம்கொண்ட டாஹக் மருத்துவரை நாட, அவ்வேடத்திற்கு மாறிய அஹ்ரிமான் அப்பாம்புகளை அகற்ற முடியாது எனவும், அவைகளின் பசிக்குக் சிறார்கள் இருவரின் மூளையை உணவாக நாளாந்தம் கொடுத்தால் போதும் என்றது.
அந்த நாளிலிருந்து அரசனின் கோட்டைக்கு அருகில் வாழ்ந்த குர்தீஷ் மக்களிடமிருந்து ஆணும் பெண்ணுமாக இரண்டு சிறார்கள் கொல்லப்பட்டுப் பாம்புகளுக்கு உணவாகக் கொடுக்கத் தொடங்கினான் டாஹக். கொடுங்கோலனுக்குப் பயந்த அப்பிராந்திய மக்கள் வேறு வழியின்றித் தங்கள் பிள்ளைகளில் இருவரைத் தினமும் கொன்று அவர்களின் மூளைகளை டாஹக்கின் கோட்டைக்கு அனுப்பி வைக்கவேண்டியிருந்தது.
பாம்புகளைத் தோள்களில் கொண்ட டாஹக்கின் ஆட்சியில் சூரியன் உதிப்பதை நிறுத்திக்கொண்டது. விவசாயம் அற்றுப்போக ஆரம்பித்தது. பறவைகளும், பல விலங்குகளும் அந்த இயற்கையிலிருந்து ஓடிப்போயின. நாடெங்கும் இருட்டும், மக்களின் வேதனைக் குரல்களுமே கேட்டன.
அரசனின் கோட்டையும் அரண்மனையும் இருந்த ஸாக்ரோஸ் மலையின் அடிவாரத்தில் வாழ்ந்துவந்த கவா என்ற கொல்லன் பாம்பு அரசனின் நடவடிக்கைகளால் கொதித்துக்கொண்டிருந்தான். ஒரு நாள் கவாவின் மகளின் முறை வந்தது. அவளது மகளைக் கொன்று மூளையை அரண்மனைக்கு அனுப்புவதற்குப் பதிலாக கவா தன்னிடமிருந்த செம்மறி ஆடொன்றைக் கொல்லி அதன் மூளையை அனுப்பிவிட்டான்.
கவாவின் செயல் விரைவில் ஊராருக்குத் தெரியவரவே அதையே எல்லாரும் செய்ய ஆரம்பித்தனர். காப்பாற்றப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளை ஸாக்ரோஸ் மலையின் மறைவான பகுதிகளில் சுதந்திரமாக வாழ ஒழுங்குசெய்தார்கள். அவர்கள் அங்கே தங்களைத் தாங்கள் கவனித்துக்கொண்டு வாழ்ந்தார்கள். இரவுகளில் அருகேயுள்ள குடியானவர்கள் அவர்களுக்கு உணவு கொடுத்தார்கள்.
மலையில் ஒளித்து வாழ்ந்துகொண்டிருந்த அக்குழந்தைகளை கவா போர்த் தந்திரங்களைப் பயிற்றுவித்தான். மெதுவாக ஆயிரக்கணக்கில் எண்ணிக்கையில் வளர்ந்த அவர்கள் வயதாக ஆகப் போரிடுவதிலும் திறமைபெற்றார்கள்.
ஆயிரக்கணக்கில் தயாரான கவாவின் இராணுவம் பாம்பு அரசனை அழிப்பதற்காகப் புறப்பட்டது. வழியே இருந்த கிராமங்களின் மக்களும் அவ்விளைஞர், இளம் பெண்களைத் தொடர்ந்து அரண்மனையைத் தாக்கினார்கள்.
அரண் தகர்க்கப்பட்டு, அரண்மனைக்குள் புகுந்த வீரர்கள் அரசனின் படைகளைத் தாக்கினார்கள். கவா நேரடியாக அரசனின் வாழும் பகுதிக்குச் சென்று அவனை இழுத்துவந்து அவனது கழுத்தில் வாழும் பாம்புகளையும் கொல்லி அவனது கழுத்தையும் வெட்டியெறிந்தான்.
கொடுங்கோலன் டாஹெக் கொல்லப்பட்டதும் சூரியன் மெதுவாக உதிக்கத் தொடங்கியது. மெஸப்பொத்தேமிய மக்களுக்கு நல்ல செய்தி பரப்பப்பட்டது. புல் பூண்டுகள், செடிகள் மீண்டும் முளைவிட்டன. அப்பிராந்தியத்தை விட்டு ஓடிப்போன விலங்குகள், பறவையினங்கள் திரும்பிவந்தன.
அது ஒரு வசந்தம் பிறக்கும் நாள். பங்குனி மாதம் 21ம் திகதி. நாட்டு மக்கள் சகலரும் ஒன்றிணைந்து புதிய தினத்தைபுதிய சந்தோசமான காலத்தைக் கொண்டாட ஆரம்பித்தார்கள். அழகான கடும் நிற உடைகள் அணிந்து பெண்கள் ஆட, ஆண்கள் ஆங்காங்கே நெருப்பை உண்டாக்கி அதைச் சுற்றி எல்லோரும் நடனமாடினார்கள். விதம் விதமான உணவுவகைகள் சமைத்துப் பரிமாறினார்கள்.
தனது மக்களைக் கொடுங்கோலனிடமிருந்து கவா விடுவித்த அந்த நினைவுநாள்தான் தொடர்ந்தும் பர்ஸியர்கள், குர்தீஷ் மக்கள், ஆப்கான் மக்களால் நவ்ரூஸ்[புதிய நாள்] என்ற புதுவருட நாளாகக் கொண்டாடப்படுகிறது.
எழுதுவது சாள்ஸ் ஜே