பீஜிங் வந்த பச்சை ரயில் – வியந்த சீன மக்கள் வந்தது யார்?
திங்களன்று, பங்குனி 26 ம் திகதியன்று பீஜிங் நகர மக்கள் தங்கள் நகரின் பல இடங்களில் ஏற்படுத்தப்பட்ட போக்குவரத்துத் தடைகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கவனித்து ஆச்சரியப்பட்டார்கள். சீனாவின் கம்யூனிசக் கட்சியின் அரசியல்வாதிகளின் பயணங்கள் பெரும்பாலும் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடந்தாலும் குறிப்பிட்ட நாளில் நகருக்குள் ஆங்காங்கே காணப்பட்ட நிலைமை வித்தியாசமாக இருந்தது.
அதைத் தொடர்ந்து சீனாவில் பாவிக்கப்படாத மஞ்சள் குளானனயொன்றை வரியாகக் கொண்ட கடும்பச்சை நிற ரயிலொன்று பீஜிங் நகருக்குள் அதி பாதுகாப்புடன் நுழைந்தது பலரின் கவனத்தைக் கவர்ந்தது. சமூக வலைத்தளங்களின் காலத்தில் இதை விடுவார்களா மக்கள்?
வேகமாகச் சீனாவின் சமூக வலைத்தளங்களில் பரவிய அந்த ரயிலின் படங்கள் ஜப்பானியர்களின் கவனத்தையும் ஈர்த்து, அங்கிருந்து சர்வதேசத்திலும் பிரபலமானது. நிச்சயமாக அது அரசியல்வாதியொருவர் பாவிப்பதுதான், ஆனால், யாரவர்? என்று யோசித்தவர்கள் பெரும்பாலும் பதிலையும் கண்டுபிடித்துவிட்டார்கள்.
அப்பதில் சரியே என்று அடுத்த நாள் பிற்பகல் அந்த ரயில் திரும்பிப் போனபின்பு சீன அரசின் ஊடகங்களால் வெளியிடப்பட்ட செய்திகள் நிரூபணம் செய்தன. தனது தந்தைக்குப்பின்பு 2011 இன் கடைசிப் பகுதியில் வட கொரியாவின் தலைமைப் பதவியை எடுத்துக்கொண்ட கிம் யொங்-உன் தான் சீனாவுக்கு வந்த அந்தச் சீமான்.
தனது பதவியேற்பின் பின்பு முதல் தடவையாக வெளிநாட்டு விஜயம் செய்த கிம் யொங்-உன் தனது நாட்டுக்குள் எப்படிப் பிரயாணம் செய்கிறார் என்ற விபரங்கள் வெளியிடப்படுவதில்லை. ஆனால் குறிப்பிட்ட ரயில், அல்லது அதே போன்ற நிறமுள்ள ரயிலில்தான் அவரது தந்தை கிம் யொங்- இல் பயணம் செய்வதுண்டு என்பது பிரபலமானது.
உல்லாசப் பிரியரான கிம் யொங்-இல் விமானப் பயணத்துக்குப் பயந்தவர். தனது உல்லாச வசதிகள் உள்ள ரயிலில் தனக்கு நெருக்கமானவர்களுடன் குடி, உல்லாசப் பெண்களுடன் சீனா, ரஷ்யா உட்படக் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணம் செய்திருக்கிறார்.
ஜப்பானின் பிடியிலிருந்த வட கொரியப் பகுதியில் ஒரு புனித மலையில் இரட்டை வானவில்களுக்கு நடுவே ரோஜாப் பூக்களின் வரவேற்புடன் கிம் யொங்-இல் பிறந்ததாகக் கூறப்பட்டாலும் அவர் உண்மையிலேயே பிறந்த இடம் வியாட்ஸ்கோயெ என்ற ரஷ்யாவுக்குச் சேர்ந்த நகரம்தான் என்று குறிப்பிடப்படுகிறது. யூரி இர்ஸனோவிட்ச் கிம் என்ற பெயருடன் கிம் உல்-சுங் என்ற சிகப்பு இராணுவ உயரதிகாரி ஒருவருக்கு மகனாகப் பிறந்தார். ஸ்டாலினுக்கு நெருக்கமான இந்த அதிகாரியைத் தான் பின்பு ஸ்டாலின் வட கொரியாவின் தலைவராக்கினார்.
பொருளாதார ரீதியில் முழுக்க முழுக்க சீனாவில் தங்கியிருக்கும் நாடான வட கொரியாவின் தலைவராக இருந்த கிம் யொங்-இல் அரசியலிலும் சீனாவின் சொல்லைக் கேட்டு நடக்கும் நல்ல பிள்ளைதான். தனது 17 வருட ஆட்சிக்காலத்தில் சீனாவுக்கு அடிக்கடி பயணம் செய்து அவர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தது போல மகன் கிம் யொங்-உன் செய்யவில்லை.
கிம் யொங்-உன் பதவியேற்றது முதல் வட கொரியா தன்னை உலகின் சகல நாடுகளுக்கும் அன்னியப்படுத்திக்கொண்டது என்றே கருதப்படுகிறது. அதன் விளைவால்தான் அமெரிக்கா உட்பட்ட சகல நாடுகளும் வட கொரியாவைத் தண்டிப்பதைச் சீனாவும் ஏற்றுக்கொண்டு கிம் யொங்-உன் உடன் ஒரு காட்டமாக நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டது.
ரஷ்யாவுக்கு இன்னும் 11 பில்லியன் டொலர்கள் பெறுமதியான கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நாடாக இருக்கிறது வட கொரியா. நாட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்கள், எரிபொருள் ஆகியவையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் வட கொரியா சில வாரங்களுக்கு முதல் தான் அணு ஆயுதப் பரீட்சைகளை நிறுத்தத் தயார் என்றும் டொனால்ட் டிரம்பைச் சந்திக்கத் தயாரென்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சீன அதிபர் ஷீ சின் பிங்கைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகள் நடாத்திய கிம் யொங்-உன் அங்கேயும் “கொரியப் பிராந்தியத்தில் வளர்ந்துவரும் சமாதான நிலையை விரும்புகிறேன். அமெரிக்காவும், தென் கொரியாவும் ஒத்துழைத்தால் நாங்கள் எங்கள் அணு ஆயுத ஆராய்ச்சிகளை நிறுத்தத் தயார்,” என்று அறிக்கை விட்டிருக்கிறார்.
இந்தப் பச்சை ரயில் பயணத்தின் மூலமாக கிம் யொங்-உன் தான் டொனால்ட் டிரம்ப்புடன் நேரடியாகச் சந்திக்கத் தயாரென்று பச்சைக் கொடி காட்டியிருக்கிறார் எனலாமா?