“அழிவுக்காலத் தீர்க்கதரிசி ” மால்துஸ் ” கணிப்புக்கள் தவறாகின்றனவா?
சமூகக் கல்வி, மனிதர்களின் பிறப்புக்கள், பொருளாதாரம் போன்றவையை ஒழுங்காகப் படித்தவர்களுக்கு தோமஸ் மால்துஸ் என்றால் யார் என்று கட்டாயம் தெரியும்!
பிரிட்டனைச் சேர்ந்த மால்துஸ் ஒரு பொருளாதார அறிஞர். தனது ஆராய்ச்சியின் மூலம் 1798 இல் “உலக மக்கள் தொகை உலகின் வளங்களால் சமாளிக்க முடியாத நிலைமைக்கு வளரும். அதன் உச்சக்கட்டத்தில் வியாதிகள், போர்கள், இயற்கை அழிவுகள் உண்டாகி மக்கள் தொகையை அவ்வப்போது அழித்துக் கட்டுப்படுத்தும்,” என்று விபரித்தவர் மால்துஸ் என்று அவரைப் பற்றித் தெரியாதவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.
மால்துஸின் ஆராய்ச்சிகள் அன்றைய உலகை அதிரவைத்த ஒரு குண்டு எனலாம். பல அறிஞர்கள் அவரது கூற்றை ஆதரித்து அவரது பெயரில் “மால்துஸியானிஸம்” என்ற ஆராய்ச்சிக் கோட்பாடும் அதன் தொடரும் இன்னும் வாழ்கிறது.
மால்துஸுக்குப் பின்பு அவரது கோட்பாட்டிலிருந்து ஆராய்ச்சிகள் செய்பவர்கள் உலகில் அதன்பின்பு உண்டாகிய பல தொற்றுநோய் அழிவுகள், உலகப்போர்கள் மால்துஸ் சுட்டிக்காட்டிய மக்கள் தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தும் கருவிகளே என்கிறார்கள்.
“அழிவுக்காலத் தீர்க்கதரிசி” என்று மால்துஸைச் சாடுகிறவர்கள் அதற்கு எதிராக “மக்கள் தொகை அதிகரிக்கும் அதே சமயம் கல்வியறிவும், விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் சேர்ந்து புதிய கண்டுபிடிப்புக்களால் உலகின் வளங்களை மேம்பட்ட முறையில் பாவித்து வளரும் மக்கள் தேவைகளைப் பூர்த்திசெய்யும்,” என்று கூறினார்கள்.
மால்துஸ் மறைந்து சுமார் இருநூறு வருடங்களாகின்றன. உலக நடப்புக்கள் மீண்டும் மீண்டும் அவரது அழிவுக்காலத் தீர்க்கதரிசனத்தைப் பொய்ப்பித்துக்கொண்டே வருகின்றன.
1800 களில் ஒரு பில்லியனாக இருந்த உலக மக்கள் தொகை அதிகரித்து இரண்டு பில்லியன்களாக 130 ஆண்டுகளாகின. அதுவே மூன்று பில்லியன்களாகின முப்பதே ஆண்டுகளில் [1960]. மேலும் 15 வருடங்களில் மேலுமொரு பில்லியன் பேரால் அதிகரித்து அதற்கடுத்த பில்லியன் இன்னொரு 13 வருடங்களில் அதிகரித்து 1987 இல் ஐந்து பில்லியன்கள் ஆகின.
20 ம் நூற்றாண்டில் மட்டுமே உலக மக்கள் தொகை 1.65 பில்லியன்களால் அதிகரித்து இன்றைய உலக மக்களின் தொகை ஏழரை பில்லியன்களாகிவிட்டது.
அதேசமயம் உலகத்தின் வளங்கள் பாவிக்கப்படுவது வெவ்வேறு விதமான தொழில்நுட்பங்களால் செம்மைப்படுத்தப்பட்டும் வருகிறது என்பதை நாம் அறிவோம். அடிக்கடி, ஆங்காங்கே இயற்கை மற்றும் தொற்று நோய் அழிவுகள் வந்தாலும் கூட இன்றைய நிலைமையில் உலக வளங்கள் மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக்கொண்டுதான் இருக்கிறது. உலக மக்களின் பிரச்சினைகள், அவ்வளங்களைப் பாவிப்பது, பங்கிடப்படுவது ஆகியவற்றில்தான் தங்கியிருக்கிறது எனலாம்.
அது ஒரு பக்கமிருக்க இனப்பெருக்கத்தின் வேகமும் உலகில் குறைந்துவிட்டது என்பதை நாம் கவனிக்கவேண்டும்.
மால்துஸ் வாழ்ந்த காலத்தில் உலகின் குடும்பங்கள் மிகவும் பெரியதாக இருந்தன. அதற்கான காரணம் அன்று பிறக்கும் பிள்ளைகள் பல சிறு குழந்தைகளாகவோ, இள வயதிலோ இறந்தன. முக்கிய காரணம் சுகாதாரம், ஆரோக்கியம் ஆகிய நிலைமைகள் மோசமாக இருந்தன.
அத்துடன், அன்றைய முக்கிய தொழிலான விவசாயத்தில் பிள்ளைகளின் உதவி எதிர்பார்க்கப்பட்டது, வயது வந்த காலத்தில் பெற்றோரைக் காப்பாற்றுவது பிள்ளைகள் என்பதே எதிர்பார்க்கப்பட்டு, நிஜமாகவும் இருந்தது. அக்காரணங்களால் ஒவ்வொரு தம்பதிகளும் தங்களால் முடிந்தளவு குழந்தைகளைப் பெற்றார்கள். அதிக எண்ணிக்கையில் பெற்றால் அதிகமானவர்கள் நீண்டகாலம் வாழ்ந்து உதவுவார்கள் என்பதாக இருந்தது.
ஆனால் 1800 களில் ஐரோப்பா, வட அமெரிக்காவில் ஆரம்பித்த இயந்திரமயமாக்குதலும், நகரமயமாகுதலும் நிலைமையை மாற்ற ஆரம்பித்தன. அப்பிராந்தியங்களில் கல்வியறிவு, தொழில்நுட்பங்களும், சுகாதார வசதிகளும் சேர்ந்து மக்களின் வாழ்வை மேம்படுத்தச் செய்தன. அந்த நாட்டு அரசாங்கங்கள் மக்களுக்கு வெவ்வேறு தேசியக் காப்புறுதிகளைச் செய்துகொடுத்தன. அதனால் சுபீட்சமும் வயதுவந்த காலத்தில் பிள்ளைகளில் தங்கியிருக்கத் தேவையற்ற நிலைமையையும் மக்கள் பெற்றார்கள்.
புதியதாக ஏற்பட்ட மாற்றங்கள் அளவுக்கதிகமான பிள்ளைகள் பெற்றால் சுய வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் என்ற உண்மையை மக்களுக்குப் புரியவைத்தன. அதனால் 1950 களுக்குப் பின்பு பெண்களின் கரித்தரிப்பு அளவு வேகமாகக் குறையத் தொடங்கியது. தன் கருத்தரிப்பு வயதுகளில் சராசரியாகச் சுமார் 5.5 பிள்ளைகளைப் பெற்ற பெண் இப்போது சராசரியாக சுமார் 2.5 பிள்ளைகளையே பெற்றுக்கொள்கிறாள்.
ஒவ்வொரு பெண்ணும் 2.00 க்கு மேற்பட்ட பிள்ளைகளைத் தனது கருத்தரிப்பு வயதுகளில் பெற்றுக்கொண்டால் மட்டுமே உலக மக்கள் தொகை அதிகரிக்கும். சுமார் 2.0 அளவில் அது இருக்குமானால் ஒரு நிலையான அளவு மக்கள் தொகையே நீடிக்கும். ஏனெனில் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்து ஒரு பெண் 2.0 பிள்ளைகளைப் பெற்றால் அது அவர்களது இடத்தை நிறைப்பதில் மட்டுமே இருக்கும். 3.0 பிள்ளை பெறும்போதுதான் இரண்டு பேர் சேர்ந்து தங்களை விட அதிகமாக ஒருத்தரை உருவாக்குகிறார்கள்.
உலகம் முழுவதும் பரவலாக இருந்த அதிக பிள்ளைகளைப் பெறுதல் என்பது இப்போது உலகின் சில பிராந்தியங்களில் மட்டும் தொடருகிறது. கடந்த கால் நூற்றாண்டுகளாக ஆசியப் பிராந்தியங்களில் ஏற்பட்டுவரும் பொருளாதார சமூக வளர்ச்சி அங்கிருக்கும் சனத்தொகை மிக அதிகமான நாடுகளான சீனா, இந்தியாவிலும் பெண்களின் கருத்தரிப்பு அளவைக் குறைத்திருக்கிறது.
சீனாவின் கடுமையான கருத்தடுப்புத் திட்டங்களால் சீனப்பெண்கள் இப்போது சராசரியாக 2.0 க்குக் குறைவாகவே பிள்ளைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதாவது சீனா இன்று உலகின் அதிக மக்கள் தொகையுள்ள நாடாக இருப்பினும் விரைவில் அந்த நாட்டு மக்கள் தொகை ஒரு சீரான அளவுக்கு வந்து குறையும் சாத்தியமே இருக்கிறது.
இந்தியா இன்று உலகின் இரண்டாவது ஜனத்தொகை அதிகமான நாடாக இருக்கிறது. அங்கே பெண்களின் கருத்தரிப்பு அளவு 2.5 க்குக் கீழ் போய்விட்டது. அதாவது விரைவில் இந்தியா உலகின் அதிக ஜனத்தொகையுள்ள நாடாகினாலும் அங்கேயும் மக்கள் தொகை சீரான ஒரு எண்ணிக்கைக்கு வந்து குறையும் என்றே கணிக்கப்படுகிறது.
முஸ்லீம் மக்கள் வாழும் சனத்தொகை அதிகமுள்ள நாடுகளில் பிள்ளை பெறுதலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துதலும், தொடர்வதும் மிகப் பெரும் பிரச்சினைகளாக இருந்தன. ஆனால், இந்தோனேசியா, ஈரான், சவூதி அரேபியா, துருக்கி பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பெண்கள் தமது கருவுறும் வயதுகளில் 2.5 பிள்ளைகளைப் பெறும் நிலை உண்டாகிவிட்டது. எகிப்து, பாகிஸ்தான் நாடுகளில் மட்டும் பெண்கள் இன்னும் 3.5 பிள்ளைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனாலும், அந்த நாடுகளிலும் அந்த எண்ணிக்கை மெதுவாகக் கீழிறங்கி வருவதாகவே கணிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மீதமிருப்பது ஆபிரிக்காவில் சகாராவைச் சுற்றியுள்ள சில நாடுகளும், சில தென்னாபிரிக்க நாடுகளும்தான். நகரமயமாக்கல், பொருளாதார, கல்வி, சுகாதார வளர்ச்சி இன்னும் ஒழுங்காகப் பரவாத அப்பிராந்தியத்தில் மட்டும் பெண்களின் பிள்ளைப்பெறுதல் எண்ணிக்கை சுமார் 5.00 ஆக இருக்கிறது. ஆனாலும், 1960 களில் சராசரியாக 8.00 பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டவர்கள் இப்போது அத்தொகையைக் குறைத்துவிட்டார்கள் என்பதைக் கவனித்தால் அங்கும் மெதுவாக ஜனத்தொகை வளர்ச்சி சீராகிக் குறைந்துவரும் சாத்தியமே காணப்படுகிறது.
சனத்தொகை அதிகரிப்பையும் உலக வளங்களின் நிலையையும் பொறுத்தவரை மால்துஸ் கணிப்பீடுகள் படிப்படியாகத் தவறாகிக்கொண்டு வருகின்றன என்பது வெளிச்சம்.