நாத விநோதம் 2018 – ஈழத்தின் கலைஞர்களால் அரங்கம் அதிர்ந்தது

ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் – UK  பெருமையுடன்  வழங்கிய நாத விநோதம் 2018  நிகழ்ச்சி இந்த ஆண்டு ஈழத்தின் கலைஞர்களால் பெருமையுற்றது.

நாதஸ்வர வித்துவான் குமரன் பஞ்சமூர்த்தியின் “நாத சங்கமம்” இசைக்குழுவினர் ஈழத்தின் யாழ் மண்ணிலிருந்து வந்து லண்டன் மாநகரத்தில் அமைந்த பிரமாண்டமான மண்டபத்தில் மிகச்சிறப்பாக இசை நிகழ்வை கடந்த சனிக்கிழமை அரங்கேற்றியிருந்தார்கள். இவர்களுடன் தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த மதுமிதா மற்றும் மும்பையிலிருந்து வருகை தந்த மூங்கில் தோட்டம் பாடல் புகழ் “அபே ஜோர்புர்க்கர்” ஆகியோரும் இணைந்து மிகச்சிறந்த இசைக்கலவையை வழங்கியிருந்தனர்.

பாடல்கள்,இசைச்சங்கமம்,நடனம்,நாட்டியம் என பலவகை அரங்க ஆற்றுகைகளை ஒரேமேடையில் நேர்த்தியாக அரங்கம் கொண்டுவந்த நாதவிநோதம் இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக ஈழத்துக்கலைஞர்களை குழுவாக ஈழத்திலிருந்து அழைத்து பெருமை கண்டது.

பார்வையாளர்கள் பலரும் ஈழத்தின் குமரன் பஞ்சமூர்த்தி அவர்களின் நாதஸ்வர ஓசை தொடர வேண்டும் என்ற ஏக்கத்துடன் அரங்கில் நிறைவு வரை காத்திருந்தது அதற்கு சாட்சி.

தவில் வித்துவான் விபூரணன் உற்சாகத்துடன் நேர்த்தியாக வாசித்த தவில் ஊரில் பார்த்த மேளச்சமாவை நினைவூட்டியது.

தவிலுடன் இணைந்த தபேலா மற்றும் மேற்கத்திய தாளவாத்தியக் கருவிகள் அனைத்தும் இணைந்து இசையின் உச்சக்கட்டத்திற்கே அழைத்துக்கொண்டு போனது.பல தடவைகள் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி நிகழ்ச்சிக்கு உற்சாக பாராட்டுக்கள் கொடுத்தது அரங்கில் மறக்க முடியாதது.

இந்தியாவிலிருந்து வருகை தந்த பாடகர்கள் மதுமிதா மற்றும் அபே அரங்குக்கு ஏதுவாக தங்கள் பாடல்களால் எல்லோரையும் இசைவசப்படுத்தினார்கள்.

தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வந்த  நாதஸ்வர இசையுடன் இணைந்த அனைத்தும் அரங்கில் இசைக்கப்பட்டது. அதில் மதுமிதா நாதஸ்வர இசையுடன் இணைந்த அனைத்தும் மிகச்சிறப்பானது.அதில் தவில் கலைஞன் இடையிடையே ஜதியுடன் கொடுத்த லய தீர்மானங்கள் பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. அதுமட்டுமல்லாமல் திரைப்படங்களில் இதே இசையுடன் நடனம் இணைவது போலவே அரங்கிலும் எம் லண்டனில் வதியும் நடனக் கலைஞர்களால் மிகச்சிறப்பாக நடனமாடப்பட்டது அரங்கில் அனைவரையும் அரங்காற்றுகையால் கட்டிப்போட்டது.நிகழ்ச்சியை ஐபிசி தமிழ் ஒளிபரப்பாளர் யோக தினேஷ் தொகுத்து வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வையாளர்கள் இந்த வெற்றிகரமான பிரமாண்டமான ஈழத்து இசைக் கலைஞர்களின் அரங்கத்திற்கு பாராட்டுகளை ஒலி ஒளி வடிவங்களில் பகிர்ந்து வருகின்றமை அவதானிக்க கூடியதாக உள்ளது.ஒட்டுமொத்த பார்வையாளர்களும் இந்த வருட நாத விநோதம்  இசை நிழ்வுக்காக ஹாட்லிக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்திற்கு தங்கள் நன்றியையும் பாராட்டுகளையும் அரங்கிலேயே கரகோஷங்களால் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

http://www.vetrinadai.com/events/hartley-college-natha-vinotham-2018/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *