ஈகுவடோர் சிறைக்குள் குற்றவாளிக் குழுக்களுக்குள்ளேயான மோதல்களில் 120 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
வெவ்வேறு குழுக்களுக்குள் ஏற்பட்ட குரோதத்தால் அவர்கள் தமக்குள் வஞ்சங்களைத் தீர்த்துக்கொள்ள நடத்திய மோதல்களினால் ஈகுவடோரின் சரித்திரத்திலேயே மோசமானது என்று குறிப்பிடப்படும் விளைவுகள் Guayaquil நகர சிறைக்குள் நடந்திருக்கின்றன. 120 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் 80 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
குறிப்பிட்ட சிறைக்குள் வாழ்பவர்களில் பெரும்பாலானோர் போதை மருந்து வியாபாரத்தில் சர்வதேச ரீதியில் செயற்பட்டு வருபவர்களின் குழுக்களாகும். அவர்களிடையே யார் சிறைக்குள்ளே தலைமை வகிப்பது என்ற மோதல்கள் ஏற்பட்டதாலேயே செவ்வாயன்று அந்த மோசமான கைகலப்புக்களும் கொலைகளும் ஏற்பட்டிருக்கின்றன. கொல்லப்பட்டவர்களில் ஐந்து பேரின் கழுத்துக்கள் வெட்டப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிடப்படுகின்றன.
சிறைக்குள்ளிருப்பவரிடையே தொடர்ந்தும் அதிகாரிகள் கட்டுப்பாட்டைக் கொண்டுவர இயலாததால் நாட்டின் சிறைச்சாலைகளையெல்லாம் அவசரகாலச் சட்டத்துக்கு உட்பட்டவை என்று நாட்டின் ஜனாதிபதி பிரகடனப்படுத்தியிருக்கிறார். அதன் மூலம் சிறைகளுக்குள் பிரத்தியேக பொலீசாரையும், இராணுவத்தினரையும் அனுப்பி நிலைமையைக் கட்டுப்படுத்துவதே நோக்கமாகும்.
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் ஈகுவடோர் சிறைகளுக்குள் குரூரமான போர்களில் ஈடுபடுவது இது முதல் தடவையல்ல. பெப்ரவரி மாதத்தில் வெவ்வேறு சிறைகளுக்குள் ஒரே நேரத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட மோதல்களில் 79 பேர் கொல்லப்பட்டார்கள். அச்சமயத்திலும் பலர் தலை வேறு முண்டம் வேறாகத் துண்டாடப்பட்டார்கள். Guayaquil சிறைக்குள் 37 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்