உலகக்கிண்ணத்தை வெல்லப்போவது யார்?| பலமான எதிர்பார்ப்புடன் t20 இறுதிப்போட்டி
T20 உலகக்கிண்ணம் 2024 போட்டிகள் அரையிறுதிவரை நிறைவுகண்டு இன்று இறுதிப்போட்டிக்காக Kensington Oval Barbados மைதான அரங்கு தயாராகிக்கொண்டு இருக்கிறது.
இன்றைய இறுதிப்போட்டியில் பலமான இந்திய அணி மற்றும் தென்னாபிரிக்க அணி ஆகியவை மோதவிருக்கின்றன.
பல்வேறு உலகக்கிண்ண தொடர்களிலும் பலமான அணியாக வரும் தென்னாபிரிக்கா, துரதிஸ்டங்களால் தோற்று வெளியேறிய நிலைகள் கடந்து, இந்தத்தடவை முதற்தடவையாக இறுதிப்போட்டியில் பங்குபற்றுகிறது. அதனால் கிரிக்கெட்டின் பல ரசிகர்களும் தென்னாபிரிக்க கிண்ணத்தை வெல்ல வேண்டும் என எதிர்பார்த்தாலும், இந்தியா இந்தமுறை இன்னுமொரு தடவை கிண்ணத்தை நாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென உலகமெங்கும் வாழும் இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
மொத்தம் 54 போட்டிகளை கடந்து இன்று 55 வது போட்டியாக இறுதிப்போட்டி.
எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் சம்பியன்களான பல அணிகள் அரையிறுதிக்குள் நுழையாமலேயே வெளியேறியிருப்பது இந்தப்போட்டித்தொடரில் முக்கியமாக கவனிக்கப்பட்டது.
குறிப்பாக அரையிறுதிப்போட்டியில் முதற்தடவையாக நுழைந்த ஆப்கானிஸ்தான் அணி, அந்த நாட்டுமக்களே வெற்றிக்கிண்ணத்தை வென்றது போல கொண்டாடிய மகிழ்ச்சி அனைவராலும் அவதானிக்கப்பட்ட ஒன்று.
இதுவரை நடைபெற்றுமுடிந்த போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிவீரர்களே , இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஆகக்கூடுதலான மொத்த ஓட்டங்களையும் விக்கெட்டுக்களையும் பெற்றவர்களாக இருக்கிறார்கள் என்பது முக்கியமானது.
குறிப்பாக ஒருபோட்டியில் ஆகக்கூடுதலாக 9 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றிய Fazalhaq Farooqi தான் இதுவரை நடைபெற்ற போட்டி முழுவதிலும் ஆகக் கூடிய விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராவார். இவையெல்லாம் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டாட்டம் தான்.
அதே போலத்தான் சூப்பர் 8 அணிகளுக்குள் நுழைந்த அமெரிக்க அணி பலரது கவனத்தையும் ஈர்த்த இன்னுமொரு விடயமாகும். நியூசிலாந்து , பாகிஸ்தான் , இலங்கை போன்ற பலமான அணிகளை புறந்தள்ளி இந்த தடவை குழுநிலைப் போட்டிகளை நடாத்திய நாடான அமெரிக்கா, தனது அணியை சூப்பர் 8 சுற்றுக்குள்ளும் பலமாக நுழைத்து கவனத்தை ஈர்த்தது.
பலமான அணியாக எதிர்பார்க்கப்பட்ட , கடந்த உலகக்கிண்ண சம்பியனான இங்கிலாந்து அணிகூட இந்திய அணியிடம் மிகப்படுதோல்வியடைந்து வெளியேறியிருந்தது.
இதுவரை எந்தவொரு அணிவீரரும் 100 ஓட்டங்களைப் தொடாத ஒரு உலகக்கிண்ணத் தொடர் இது. மேற்கிந்திய தீவுகளின் Nicholas Pooran 98 ஓட்டங்களை அடித்து சதத்தை அண்மித்தது மட்டுமே நடந்து முடிந்த ஒன்று.
அந்த அடிப்படையில் பல விடயங்களைப் பதிவுசெய்து உலகக்கிண்ணப் போட்டிகள் நிறைவுக்கு வந்து இறுதிப்போட்டியில் இந்திய தென்னாபிரிக்க அணிகள் பலப்பரீட்சை பார்க்கவுள்ளன.
இந்திய அணி வெல்லலாம் என கணிப்புக்கள் சொல்கின்றன.
இருப்பினும் கிரிக்கெட் போட்டிகளில் எதுவும் நடக்கலாம்.
அதுவும் t20 போடாடிகளில் வெற்றி தோல்வி எந்தப்பக்கமும் மாறலாம்.
கடந்த ஒருமாதகாலமாக தொடர்ந்த உலகக்கிண்ணத்தொடர் போட்டிகளுக்கு நிறைவாக இன்றைய நாள் எந்த அணி உலகக் கிண்ணத்தை வெல்லபோகிறது என்ற எதிர்பார்ப்போடு அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மேற்கிந்திய தீவுகள் பக்கம் காத்திருக்கிறார்கள் என்பது மறுக்கமுடியாது.