திருக்கோவில் கல்வி வலயத்தில் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபர் கௌரவிப்பு

அரச கல்விச்சேவையில் 33 வருடங்கள் நிறைவு செய்து அக்கரைப்பற்று திருவள்ளுவர் வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்றுவரை 13 வருடங்கள் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் முருகேசு தங்கேஸ்வரன் அவர்களை
கௌரவிக்கும் பிரமாண்டமான சேவைநலன் பாராட்டு நிகழ்வு பாடசாலையில் நேற்று (28) நடைபெற்றது.
திருக்கோவில் கல்வி வலயத்தில் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபர் ஒருவரை கௌரவிக்கும் மிகப்பெரும் வரலாற்று நிகழ்வாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலையினை பொறுப்பேற்ற புதிய அதிபர் திருமதி சர்மிளா சசிகரனின் தலைமையில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி குழுவினர் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என அனைவரது ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இச்சேவை நலன் பாராட்டு நிகழ்வில்
அதிதிகளாக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.கருணாகரன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான எஸ்.சுரநுதன் மற்றும் எஸ்.அம்ஜத்கான் ஓய்வு நிலை கல்விப்பணிப்பாளர்களான வி.குணாளன் எஸ்.இராசமாணிக்கம் ஆசிரிய ஆலோசகர் எம்.யோகராசா ஓய்வு நிலை அதிபர் சி.கனகரெத்தினம் பாஸ்டர் ரவிகரன் உள்ளிட்ட கல்வி உயர் அதிகாரிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள்என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ஓய்வு பெறும் அதிபர் உள்ளிட்ட அதிதிகளுக்கு மகத்தாக வரவேற்பளிக்கப்பட்டது.
இதன் பின்னராக பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் அதிபரின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டது. தொடர்ந்து பாடசாலையின் வளர்ச்சி தொடர்பான ஆய்வு கண்ணோட்டத்தின் தொகுப்பு ஒளிபரப்பப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.
இதேநேரம் அதிபரின் சேவையினை பாராட்டி அதிதிகள் உரையாற்றியதுடன் முன்மாதிரியான இப்பாராட்டு நிகழ்வை மிகச்சிறப்பாக முன்னெடுத்த அனைவரையும் பாராட்டி உரையாற்றினர்.
தொடர்ந்து அதிபரின் அர்ப்பணிப்பான சேவையினை பாராட்டி ஆசிரியர் குழாம் மற்றும் முன்னாள் ஆசிரியர் குழாம் பாடசாலை அபிவிருத்தி குழு வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பு பழைய மாணவர்கள் ஆகியோர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பா வழங்கி அதிபரை கௌரவித்தனர்.
பின்னர் ஓய்வு பெற்ற அதிபரை அவரது இல்லத்திற்கு வாகனபவனியுடன் கிராமத்தை சுற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்றமை சிறப்பாக அமைந்தது.


