எரிபொருள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும் – சஜித் பிரேமதாச

எரிபொருள் விநியோகஸ்தர்களுடனான ஒப்பந்தத்தை எவ்வித கலந்துரையாடலும் இன்றி தற்போதைய அரசாங்கம் திடீரென நிராகரித்துள்ளமையால், நாட்டில் தற்போது எரிபொருள் வரிசை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம், மதவச்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் நேற்று (01) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதிகளவிலான ஊழியர்கள் வேலையிழந்துள்ளதுடன், பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் நாட்டிற்கு வர முடியாத நிலை உருவாகியுள்ளது எனத் தெரிவித்தார்.
இந்த நெருக்கடிக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும். இதனால் அழுத்தத்திற்கு உள்ளாவது ஜனாதிபதியோ, பிரதமரோ, அல்லது அமைச்சர்களோ அல்ல, சாதாரண மக்களே இந்த பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர் எனத் தெரிவித்தார்.
எனவே, எரிபொருள் விநியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக தீர்வுகளை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனத் தெரிவித்தார்.
தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள எரிபொருள் பிரச்சினையைத் தீர்த்து, உடனடியாக எரிபொருள் விநியோக நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.