நிறுத்தாமல் சென்ற சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பர் மீது சூடு

பொதிகள் சிலவற்றுடன் தப்பியோடிய சாரதி, உதவியாளர்
– உதவியாளர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் கைது
– வாகனத்தின் முன்பகுதியில் சிதறிக் கிடந்த கஞ்சா

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் , மற்றுமொருவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கொடிகாமம் திசையிலிருந்து பருத்த்தித்துறை நோக்கி சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிய டிப்பர் வாகனம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இன்று (02) காலை பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெட்டே சந்தியில் பகுதியில் வாகனம் ஒன்றினை பொலிஸார் நிறுத்த முற்பட்டபோது , பொலிசாரின் கட்டளையை மீறி வாகனத்தை சாரதி தொடர்ந்து செலுத்தி செல்ல முற்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அதனைத் பின்தொடர்ந்த பருத்தித்துறை பொலிஸார், வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் அதன் உதவியாளர் வாகனத்தை கைவிட்டு, கறுப்புநிற பைகள் சிலவற்றை எடுத்துக் கொண்டு ஓடியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன் பின்னர் குறித்த டிப்பர் வாகனதை சோதனையிட்ட போது, சந்தேகநபர்கள் பயணித்த முன்பகுதியில் அங்குமிங்கும் கஞ்சா இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பருத்தித்துறை, மந்திகை வைத்தியசாலையில், துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் நபர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த நபர், மேற்படி டிப்பர் வாகனத்தின் உதவியாளர் என தெரிய வந்துள்ளது.

சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, அவர் தற்போது பொலிஸ் பாதுகாப்புடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

கைதான சந்தேகநபர் 19 வயதான, தர்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்றுள்ளதாக, தற்போது வரை மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்தோடு, தப்பிச் சென்ற மற்றைய சந்தேகநபரை கைது செய்ய பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *