சென்ஜோண்ஸ் மீண்டும் வெற்றிக்கிண்ணத்தை தம்வசப்படுத்தியது| வடக்கின் பெருஞ்சமர்
118 வது வடக்கின் பெருஞ்சமர் வெற்றிக்கிண்ணம் சென்ஜோண்ஸ் வசமானது. இன்று நடந்த மூன்றாம் நாள் நிறைவுப்போட்டியில் ஐந்து விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று கிண்ணத்தை மீண்டும் சென்ஜோண்ஸ் அணி தம்வசப்படுத்தியது.

இன்றையநாள் ஆரம்பத்தில் இரண்டாம் இனிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாட இறங்கிய யாழ் மத்திய கல்லூரி அணி விரைவாகவே விக்கெட்டுக்களை இழந்து மொத்தமாக 142 ஓட்டங்களை அடித்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
சென்ஜோண்ஸ் அணியின் சார்பில் அஸ்னாத் நான்கு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
93 ஓட்டங்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடர்ந்து இரண்டாம் இனிங்ஸ்க்காக களமிறங்கிய சென்ஜோண்ஸ் அணி, ஆரம்ப விக்கெட்டுக்களை இழந்து நிலைதடுமாறியது.
இருந்தாலும் மத்திய தர வரிசை வீரர்களின் நிதான துடுப்பாட்டத்தில் 5 விக்கெட்டுக்களை இழந்து 93 ஓட்டங்களை எடுத்து வெற்றிபெற்றது.
ஆட்டத்தின் சிறந்த துடுப்பாட்ட வீரராக சென்ஜோண்ஸ் அணியின் அனுஷாந்த் தெரிவுசெய்யப்பட சிறந்த பந்துவீச்சாளராக சென்ஜோண்ஸ் அணியின் அஸ்னாத் தெரிவுசெய்யப்பட்டார்.
சிறந்த களத்தடுப்பாளராக யாழ் மத்திய கல்லூரியின் அபிஷேக் தெரிவு செய்யப்பட சிறந்த சகலதுறை வீரராக மத்தியகல்லூரியின் நியூட்டன் தெரிவுசெய்யப்பட்டார்.
அதேவேளை சிறந்த விக்கெட் காப்பாளராக சென்ஜோண்ஸ் அணியின் சஞ்சுதன் தெரிவுசெய்யப்பட்டார்.
அதேவேளை 118 வடக்கின் பெருஞ்சமரின் ஆட்ட நாயகனாக சென்ஜோண்ஸ் அணியின் ஜெயசந்திரன் அஸ்னாத் அறிவிக்கப்பட்டார்.
கடந்த வருடம் 10 விக்கெட்டுக்களால் வெற்றியை தமதாக்கிய சென்ஜோண்ஸ் கல்லூரி அணி , இந்தவருடம் 5 விக்கெட்டுக்களால் வெற்றியைப்பதிவு செய்து 118வது வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளனர்.
அதன்படி வடக்கின் பெருஞ்சமரின் வரலாற்றில் 38 – 29 என்ற வெற்றிகளோடு முன்னிலையோடு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.