கனடா செல்ல காத்திருந்த இளைஞன் படுகொலை விவகாரம் நீதி கோரி போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்.!!

மல்லாவி இளைஞன் படுகொலை செய்யப்பட்டு வவுனிக்குளத்தில் போடப்பட்ட விவகாரம் நீதி கோரி பொதுமக் மக்கள் ,பொது அமைப்புக்கள் வர்த்தக சங்கம் இணைந்து மீண்டும் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (14) மல்லாவி நகரில் மேற்கொண்டுவருகின்றனர்.
வவுனிக்குளத்திலிருந்து கடந்த 30.07.2024 அன்று சடலமாக மீட்கப்பட்ட
முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியினை சேர்ந்த ஆனந்தரசா ஜீவன் (வயது 27) என்ற இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை உறுதிப்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து கொலையுடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படாத நிலையில் குறித்த இளைஞனின் கொலைக்கு நீதி கோரி மல்லாவியில் பொதுமக்கள் பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சங்கம் என்பன இணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றை கடந்த 16.08.2024 முன்னெடுத்தனர் இருந்தும் நீதி நிலைநாட்டப்பட வில்லை இதுவரை குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்து இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (14) மல்லாவி மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமானது மல்லாவி பொலிஸ் நிலையம் முன்பாக வருகைதந்து அங்கு போராட்டம் இடம்பெற்று வருகிறது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஒன்று கூடி ,
“சசீவன் மரணத்திற்கு நீதி வேண்டும்”
“கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்து”
“விசாரணைகளை துரிதப்படுத்தி நீதியை பெற்று தா”
“எமது நண்பனின் மரணத்திற்கு நீதி வேண்டும்”
“வஞ்சகரின் சூழ்ச்சிக்கு முடிவில்லையா”
“எமது பிள்ளைக்கு நீதி வேண்டும் “
போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
மல்லாவி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதேவேளை குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக இன்றைய தினம் மல்லாவி பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன.
கடந்த 16.08.2024 அன்று போராட்டம் நடத்தியபோது
மல்லாவி பொலிஸ் நிலையம் முன்பு ஒன்று கூடிய மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை , சம்பவ இடத்திற்கு வருகை தந்த மல்லாவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்கள் , குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் , இளைஞனின் படுகொலைக்கான நீதியினை தான் பெற்று தருவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை குறித்த காலப்பகுதிக்குள் துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீத்தியின் முன் நிறுத்தாவிடின் பாரியளவிலான போராட்டம் ஒன்றினை தாம் மேற்கொள்வோம் என்றும் , சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினையும் தாம் முன்னெடுப்போம் என்றும் எச்சரித்து,பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இருப்பினும் குறித்த விடயம் இடம்பெறாமையால் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியை குறித்த இடத்திற்கு வருமாறு தற்போது மல்லாவி பொலிஸ் நிலையம் முன்பாக போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 29.07.2024 அன்று இரவு சுமார் இருபது இலட்சம் ரூபா பணத்துடன் யோகபுரத்தில் இருந்து பாண்டியன் குளம் சென்ற முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியினை சேர்ந்த ஆனந்தரசா ஜீவன் (வயது 27) என்ற இளைஞனை காணவில்லை என உறவுகள் தேடிய நிலையில் 30.07.2024 அதிகாலை வவுனிக்குளம் குளத்தில் உடலமாக மீட்கப்பட்டார்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகைதந்து உடலத்தை பார்வையிட்ட முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ் ஏச் மக்ரூஸ் உடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தார்.
இந்நிலையில் 31.07.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் உடற் கூற்றுப் பரிசோதனை இடம்பெற்றது.
உடற்கூற்றுப் பரிசோதனையின் முடிவில் குறித்த இளைஞன் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட நிலையில் உடலம் உறவுகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பல்லாயிரக்கணக்கான மக்களது இறுதி அஞ்சலியுடன் இறுதிக் கிரியைகள் முன்னெடுக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் நட்டாங்கண்டல் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்ற போதும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
